பெங்களூர் – பெங்களூரில் உள்ள அல்சூரி ஏரியில் நேற்று ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெங்களூர் நகரின் மத்திய பகுதியில் உள்ளது அல்சூர் ஏரி.
சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இடம். இந்நிலையில் நேற்றுக் காலை ஆயிரக் கணக்கான மீன்கள் ஏரியில் இறந்து மிதந்தன. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏரியின் கரையோரம் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்ததை பார்க்க முடிந்தது. மீன்கள் இறந்ததற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. பெங்களூரில் உள்ள ஏரிகள் மாசடைந்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அல்சூர் ஏரியில் பலகாலமாக ஆகாய தாமரை பிரச்சினை இருந்து வந்தது. அதன் பிறகு அது சுத்தம் செய்யப்பட்டது. அல்சூர் ஏரி படகு சவாரிக்கு பெயர் போனது. பெங்களூரில் உள்ள பெல்லந்தூர் ஏரி முற்றிலும் மாசடைந்து நுரையாக காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.