Home Featured உலகம் அமெரிக்கா மீது அணுஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் – வடகொரியா எச்சரிக்கை!

அமெரிக்கா மீது அணுஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் – வடகொரியா எச்சரிக்கை!

521
0
SHARE
Ad

kimhair-kim_3209242kசியோல் – தென்கொரியா – அமெரிக்கா ராணுவத்தினரின் கூட்டுப்பயிற்சிக்கு பதிலடி தரும் வகையில், அணு ஆயுதங்களை ஏவி தாக்குதல் நடத்தப் போவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை, விண்வெளி ஆய்வு என்ற பெயரில் பூமியை வேவு பார்க்கும் அதிநவீன செயற்கைக்கோளுடன் கூடிய ஏவுகணை சோதனை போன்ற அத்துமீறல்களுக்காக வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை கடந்த சில நாட்களுக்கு முன்பு, புதிய பொருளாதார தடை விதித்துள்ளது.

அப்படியிருந்தும், அந்நாட்டு சர்வாதிகாரி கிம் ஜாங் உன், ராணுவ தலைமையகத்துக்கு கடந்த வாரம் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அதிநவீன ராக்கெட்கள், ஏவுகணைகளை பார்வையிட்டார். அப்போது அவர், அணு ஆயுதங்களை எந்த நேரத்திலும் பயன்படுத்த தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

#TamilSchoolmychoice

இது உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தென் கொரியா, அமெரிக்கா ராணுவத்தினரின் கூட்டுப் பயிற்சி தென் கொரியாவில் நேற்று தொடங்கியது.

இப்பயிற்சியில் 3 லட்சம் தென் கொரிய வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ள அமெரிக்க ராணுவத்தினர் வந்துள்ளனர். மேலும், அமெரிக்காவின் அதிநவீன விமானம் தாங்கிய போர் கப்பல்கள் தென் கொரிய கடல்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது, தென் கொரியாவின் எதிரி நாடான வடகொரியாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தென் கொரியா, அமெரிக்காவின் கூட்டு பயிற்சிக்கு பதிலடியாக அணு ஆயுத தாக்குதலை நடத்தப் போவதாக, பயிற்சி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு மிரட்டல் விடுத்தது.

இதுகுறித்து வடகொரிய ராணுவம் விடுத்த செய்திக்குறிப்பில், ‘வடகொரியாவை குறிவைத்து, அணு ஆயுத தாக்குதலுக்கான பயிற்சியைதான் தென் கொரியாவும், அமெரிக்காவும் மேற்கொண்டுள்ளன. இதனால் முன்கூட்டியே தாக்குதலுக்கும், அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கவும் எங்கள் ராணுவம் தயாராக உள்ளது.

எனவே, எந்த முன்னெச்சரிக்கையும் விடுக்காமல், வடகொரியாவின் எதிரிகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும்’ என கூறப்பட்டுள்ளது. தற்போதைய இந்த மிரட்டலால் பதற்றம் அதிகரித்துள்ளது.