கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்புக்கு உண்மையிலேயே ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயிக்க பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவோம் – அந்த வாக்கெடுப்பில் நஜிப் வெற்றி பெற்றால் அதற்குப் பிறகு அவர் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நான் கைவிட்டு விடுகின்றேன் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் அறைகூவல் விடுத்துள்ளார்.
நேற்று தனது ‘செ டெட்’ (Chedet) என்ற தனது சொந்த வலைத்தளத்தில் வரைந்துள்ள கட்டுரையில் மகாதீர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நஜிப்புக்கு உண்மையிலேயே மக்கள் ஆதரவு இருக்கின்றதா?
“மலேசியாவின் ‘சுதந்திரமான’ தகவல் ஊடகத்தினர், நாளுக்கு நாள் நஜிப்புக்கான ஆதரவு பெருகி வருவதாகவும், மேலும் அதிகமான மக்கள் அவரை ஆதரித்து வருவதாகவும் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவருக்கு மக்கள் ஆதரவு தருவதாகக் கூறப்படும் புகைப்படங்களைப் பார்த்தால், அவர்கள் எல்லாம் சிவப்பு வண்ண சட்டைகள் அணிந்திருக்கின்றார்கள். அவர்களில் சில அம்னோ தலைவர்கள் ‘நஜிப்புடன் ஒன்றுபட்டு இணைந்திருப்போம்’ (”Solidariti bersama Najib”) என்ற பதாகைகளைத் தூக்கிப் பிடித்துக் காட்டுகின்றார்கள். இவையெல்லாம், உடனுக்குடன், அவ்வளவு அவசர கதியில் நடத்தப்படுகின்றது. அவர்களுக்கு உடனடியாக “நஜிப்புடன் ஒன்றுபட்டு இணைந்திருப்போம்” என்ற எழுத்துகள் பதித்த சிவப்பு சட்டைகள் கிடைக்கின்றன – புகைப்படக்காரர்கள் படம் எடுப்பதற்கு வசதியாக!” என்று மகாதீர் தனது பதிவில் கிண்டல் தொனிக்க எழுதியுள்ளார்.
“உண்மையிலேயே நஜிப் மிகவும் பிரபலமாகத்தான் இருக்கின்றார். ஆனால் சில பிடிவாதக்காரர்கள் அப்படி நினைக்கவில்லை. ஜமால் ஜூனுஸ் என்பவர் பெல்டா குடியேற்றக்காரர்களை பேருந்துகளில் கொண்டு வந்து, இலவச சாப்பாடு கொடுத்து நடத்தப்பட்ட நஜிப் ஆதரவு பேரணியினால் கூட நஜிப்பின் பிரபலத்தின்மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. மலாய் அரசாங்கத்தை கவிழ்க்க சீனர்கள் ஏற்பாடு செய்த பெர்சே பேரணிக்கு எதிராக இந்த சிவப்பு சட்டை பேரணி நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது” என்றும் மகாதீர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொது வாக்கெடுப்பு நடத்துவோம்
“எனவே, மக்களுக்கு உண்மையிலேயே நம்பகத்தன்மை ஏற்படுத்த வேண்டுமென்றால், நாட்டிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கிடையே தேசிய அளவில் நஜிப் மீது ஆதரவு தெரிவிக்கும் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்பட்டால் அதன்மூலம், நஜிப்பின் நிதிவிவகார ஊழல்களை அம்பலப்படுத்திய காரணத்தால் மகாதீராகிய நான் தவறு செய்திருக்கின்றேனா என்பது குறித்தும் இந்த பொது வாக்கெடுப்பு நிர்ணயிக்க உதவும்” என மகாதீர் சவால் விடுத்துள்ளார்.
“மலேசியர்களுக்கு ஏற்கனவே வாக்குகள் அளித்த அனுபவம் இருக்கிறது. மிகவும் எளிமையான முறையில் இந்த வாக்கெடுப்பை நடத்த முடியும். நஜிப்பை ஆதரிப்பவர்கள் அவரது பெயருக்குப் பக்கத்தில் ‘டிக்’ என்ற (ஆதரவு) சின்னத்தை வாக்காளர்கள் போடலாம். மகாதீர் என மற்றொரு பெயரை வாக்குச் சீட்டில் போட்டு அவருக்கு எதிராகவும் வாக்குப் போடலாம். இதன்மூலம், மலேசிய வாக்காளர்கள் நஜிப்பை ஆதரிக்கின்றார்களா இல்லையா என்பதை நாம் நிர்ணயம் செய்து கொள்ள முடியும்” என்ற நடைமுறைத் திட்டத்தையும் மகாதீர் முன்மொழிந்துள்ளார்.
இந்த பொது வாக்கெடுப்பு, ஒரு நம்பிக்கையான வெளிநாட்டு பொதுஉறவு நிறுவனத்தின் மூலம் நடத்தப்படலாம். இரு தரப்பையும் சார்ந்தவர்களை பிரதிநிதிகளாக, நியமித்துக் கொள்ளலாம் என்றும் மகாதீர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
“நஜிப் வென்றால் நான் வாயை மூடிக் கொள்கின்றேன்” – மகாதீர்
“நான் ஓர் உத்தரவாதம் தருகின்றேன். இத்தகைய பொது வாக்கெடுப்பு நம்பிக்கையான வெளிநாட்டு பொது உறவு நிறுவனத்தால் நடத்தப்படுமானால் – இரண்டு தரப்பையும் (நஜிப், மகாதீர்) சார்ந்தவர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்டு நடத்தப்படுமானால் – அந்த வாக்கெடுப்பில் நஜிப் வென்று விட்டால் அதன் பின்னர் நான் நஜிப் பதவி விலக வேண்டும் என்று கேட்பதை அதோடு நிறுத்திக் கொள்கின்றேன். அதற்குப் பிறகு 1எம்டிபி, 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை, பிரிட்டன், அமெரிக்கா, ஹாலிவுட் ஆகிய இடங்களில் உள்ள பிரம்மாண்டமான மாளிகைகள் குறித்தோ, ‘வோல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட்’ (Wolf of Wall Street) என்ற பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் கொண்ட ஆங்கிலப்படத்தைப் (இந்தப் படம், ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் லியோர்னாடோ டி காப்பிரோ நடித்த – நஜிப்பின் மனைவி ரோஸ்மாவின் முதல் கணவருக்குப் பிறந்த அவரது மகன் ரிசா அசிஸ் தயாரித்த – ஆங்கிலப் படமாகும்) பற்றியோ நான் எதுவும் பேச மாட்டேன். அதற்குப் பிறகு தன் வாழ்நாள் முழுக்க மலேசியப் பிரதமராக நஜிப் தொடர்ந்து நீடிக்கலாம். ஆனால், எனது தரப்பிற்கு அதிகமான வாக்குகள் கிடைத்தால், நஜிப் ஊழல் விவகாரங்கள் குறித்து நான் எழுப்பியுள்ள விவகாரங்கள் உண்மை என பொதுமக்கள்,நம்புகின்றார்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, நஜிப் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் மகாதீர் ஆணித்தரமாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் நஜிப் பதவி விலகுவது குறித்த விவகாரத்தையும், அவர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளின் மீது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும், ஒரேயடியாக, ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றும் மகாதீர் கூறியுள்ளார்.
“இதற்கு மாற்று என்னவென்றால், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது மாமன்னரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் தேசிய பாதுகாப்பு மன்ற சட்டம் (National Security Council Act) அமுல்படுத்தப்பட்டவுடன், தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த முன்னாள் பிரதமரை (அதாவது மகாதீரை) கைது செய்து வழக்கு விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைப்பதுதான். எனக்கு வந்து கொண்டிருக்கும் தகவல்களின்படி – நான் எனது நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், எனது சத்தத்தைக் குறைக்காவிட்டால், இதுதான் எதிர்காலத்தில் எனக்கு நேரப்போகின்றது என்பது எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும் மகாதீர் தனது பதிவில் காட்டமாகக் கூறியுள்ளார்
-செல்லியல் தொகுப்பு