சிரியா – சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் செயல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளில் ஆட்சி செய்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்குள்ள யாஷ்டி இனத்தவர், கிறிஸ்தவர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்து வருகின்றனர்.
தங்களுக்கு எதிராக உள்ள மதத்தினரை தொடர்ந்து அவர்கள் இனப்படுகொலை செய்து வருகின்றனர் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பினர் நடத்தி வரும் இந்த தாக்குதல்கள் இனப்படுகொலையின் வெளிப்பாடுதான் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், யாஷ்டி இனத்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினரை ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து படுகொலை செய்து வருகின்றனர். ஐ.எஸ். அமைப்பை அழிப்பதற்காக 66 உறுப்பினர்கள் கொண்ட கூட்டணி வேலை செய்து வருகிறது.
தீவிரவாதிகளை உலக நாடுகள் அனைத்தும் இணைந்து வீழ்த்த வேண்டும். இதன் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் வேறு இயக்கமாக மாற முடியாமல் அழிந்துபோவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்ற தீர்மானத்தை கடந்த பிப்ரவரி மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றமும் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.