மணிலா – 10 இந்தோனிசிய சிப்பந்திகளோடு கூடிய விசைப்படகு ஒன்றை பிலிப்பைன்சிலுள்ள அபு சயாப் தீவிரவாதிகள் கடந்த வாரம் கடத்தியுள்ளதாக நேற்று மணிலா அறிவித்துள்ளது.
கடத்தியவர்களை விடுவிக்க படகு உரிமையாளரிடம் அவர்கள் ஒரு பெரிய பிணைத்தொகை ஒன்றையும் கேட்பதாக பிலிப்பைன்ஸ் இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜகார்த்தாவில் இருந்து மணிலாவிற்கு சென்று கொண்டிருந்த தாய்வானைச் சேர்ந்த அந்த தனியார் விசைப்படகை மலேசிய எல்லையில் வைத்து அபு சயாப் இயக்கத்தினர் கடத்தியுள்ளனர்.
தாங்கள் கடத்தப்பட்டதை படகு சிப்பந்திகள் உடனடியாக தங்களது முதலாளிக்குத் தகவல் தெரிவித்துவிட்டனர் என்றும், ஆனால் எந்த இடத்தில் அவர்கள் கடத்தப்பட்டார்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அபு சயாப் இயக்கம் தொடர்ந்து இது போன்ற கடத்தல்கள், ஆட்களைப் பிணைபிடித்தல், முதலாளிகளை மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.