Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: டார்லிங் 2 – தடுமாறும் திரைக்கதை! உதவாத காமெடி! பயமுறுத்தாத பேய்!

திரைவிமர்சனம்: டார்லிங் 2 – தடுமாறும் திரைக்கதை! உதவாத காமெடி! பயமுறுத்தாத பேய்!

768
0
SHARE
Ad

11231109_1656649617924763_1297022576244828588_oகோலாலம்பூர் – கடந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சத்தமின்றி வெளிவந்து, மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்ற படம் ‘டார்லிங்’. இசையமைப்பாளர் ஜீவி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் பயம், நிறைய காமெடி என்ற வெற்றி பார்முலாவோடு பல படங்கள் வெளிவந்துவிட்டன. ஆனாலும், இப்போதும் வாரம் ஒரு பேய்ப் படமாவது வந்து கொண்டு தான் இருக்கின்றது.

அந்த வகையில், இந்த வாரம் ‘டார்லிங்’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பிலேயே, மீண்டும் ‘டார்லிங் 2’ என்ற படம் வெளியாகியிருக்கின்றது. இந்தப் படத்தை சதிஸ் சந்திரசேகரன் என்பவர் இயக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

படத்தின் தலைப்பு தான் இரண்டாம் பாகம் போல் தெரிகிறதே தவிர, ‘டார்லிங்’ படத்தின் கதைக்கோ, அதில் நடித்தவர்களுக்கோ ‘டார்லிங் 2’-ல் எந்த வித தொடர்பும் இல்லை.

‘ஜின்’ என்று முதலில் பெயரிடப்பட்ட இந்தப் படம் ஞானவேல்ராஜாவின் ஆலோசனைப் படி ‘டார்லிங் 2’ என்று மாற்றப்பட்டுள்ளது.

கதைச் சுருக்கம்

Darling-2-Movie-Review-And-Rating-3நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கும் நெருங்கிய நண்பர்கள் ஐந்து பேர் (கலையரசன், ரமீஸ் ராஜா, மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன்) சுற்றுலா செல்ல முடிவெடுக்கின்றனர்.

கலையரசனுக்கு வால்பாறையில் எஸ்டேட் மற்றும் பங்களா இருப்பதால் அங்கு செல்லலாம் என்று கூறுகின்றனர். இதற்கு முன்பு பல முறை அங்கு சென்று கொண்டாட்டமாக இருந்துள்ளதால், இந்த முறையும் அங்கு செல்லலாம் என்கின்றனர்.

ஆனால் கலையரசன் மட்டும் தான் அங்கு வரவில்லை என்று பிடிவாதம் பிடிக்கின்றார். அதற்கு ஒரு பிளாஷ்பேக் காட்டப்படுகின்றது. பின்னர் நண்பர்களின் வற்புறுத்தலால் வர சம்மதம் தெரிவிக்கின்றார்.

அங்கு செல்லும் அவர்களுக்கு ஏற்படும் திகில் அனுபவமும், அதற்குப் பின்னால் சொல்லப்படும் காரணமும் தான் படத்தின் திருப்பங்கள்.

இந்தக் கதை இயக்குநர் சதிஸ் சந்திரசேகரன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாம்.

குழப்பும் திரைக்கதை 

app_thumb_512படத்தின் தொடக்கக் காட்சிகளைப் புரிந்து கொண்டு, கதையோடு நாம் பயணிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகின்றது. அந்த அளவிற்கு காட்சிகள் தெளிவின்றி வேகமாக நகர்கின்றன.

கிருஷ்ணாவும், ராமும் சகோதரர்கள் என்பதை புரிந்து கொள்ளவே தடுமாற வேண்டியுள்ளது. இருவரின் தோற்றத்தையும் இன்னும் கொஞ்சம் வித்தியாசப்படுத்தியிருக்கலாம்.

சரி… எதையோ பெருசா சொல்லப் போறாங்க என்று நினைத்துக் காத்திருக்க, இடைவேளைக்கு முன்பே அவர்களைப் பழி வாங்க வரும் பேய் யார்? என்பது வெளிப்படையாகவே தெரிந்துவிடுகின்றது.

அதன் பின், “எதற்காக இந்தப் பழிவாங்கல்?” என்ற கேள்வி தான் நம்மை கடைசி வரை இருக்கையில் அமர வைக்கின்றது. ஆனால் அந்தக் கேள்விக்குப் பதில் தெரியும் போது ‘ஹ்ம்ம்ம்’ இதுக்குத்தானா? என்று சலித்துக் கொள்ள வேண்டியுள்ளது. அந்த அளவிற்கு உப்பு சப்பிலாத ஒரு திருப்பம். சரி.. காமெடிக் காட்சிகளையாவது சிரிக்கும் படியாக எடுத்திருக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை.

“டேய்.. நீ என் பிரண்டு.. உனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை நீ போயிடு” என்று காளி வெங்கட்டிடம் கூறும் பேய், ஏன் தொடக்கக் காட்சியில் அவரைக் கொல்லப் பார்த்தது?

ஆயிஷா மீது அரவிந்துக்கு ஈர்ப்பு இருப்பதைப் போல் வசனம் ஒன்றிலும், காட்சி ஒன்றிலும் காட்டியது ரசிகர்களைக் குழப்பவா?

இப்படியாகப் பல கேள்விகள் படம் பார்க்கும் நமக்கு எழுகின்றன. சுவாரஸ்யம் கருதி பலவற்றை இங்கே சொல்லமுடியவில்லை.

மொத்தத்தில், ஒரு பழிவாங்கும் பேய்க் கதையை சொல்ல நினைத்த இயக்குநர் திரைக்கதையிலும், அதைக் காட்சிப்படுத்துவதிலும் தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லத் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

ரசித்தவை

Darling-2-Movie-Review-And-Rating-2

படத்தின் தொடக்கத்தில் வரும் காட்சி மட்டும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அதில் நடித்த பெண்ணின் முகவெட்டு அந்தக் கதாப்பாத்திரத்திற்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.

திக்குவாயாக நடித்திருக்கும் மெட்ராஸ் ஹரி, இரவில் சிப்ஸ் தேடிச் செல்வது, நண்பர்களுடன் சுற்றுலா வந்தாலும் பொண்டாட்டியுடன் எப்போதும் போனில் கொஞ்சிக்கொண்டே இருக்கும் அர்ஜூனன், “பேய் ஆயிட்டோனே ரொம்ப மாறிட்ட மச்சி” என்று கலகலப்பூட்டும் காளி வெங்கட், வால்பாறை வரதனாக முனீஸ்காந்த் ஆகியோரின் நடிப்பு ரசிக்க வைக்கின்றது.

sathish-chandrasekaran-talks-about-darling-2-photos-pictures-stillsஆயிஷாவாக வரும் மாயாவின் தோற்றமும், சிரிப்பும் அழகு. ரமீஸ் ராஜின் அந்த யானைக் காட்சி சிறப்பு.

அடுத்ததாக வசனங்கள், “பேய் கதை எனக்குப் பிடிக்கும்.. ஆனால் பேயே வந்து கதை சொன்னா பிடிக்காது”,

“அரவிந்த் மேலே இருக்குறான்.. அவன் மேல பேய் இருக்குது”,

“நாங்களெல்லாம் மோகினிக்கே மூடேத்திவிட்டு தப்பிச்சவிங்க”,

“நாங்களெல்லாம் பேய்க்கே பிரண்டு ரெக்கொஸ்ட் கொடுத்தவங்க” இப்படியாகப் படத்தில் இடம்பெறும் நகைச்சுவை வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

ஒளிப்பதிவு, இசை

Darling-2-(3)விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் வால்பாறை மலைகளும், எஸ்டேட்டும், பங்களாவும் அழகு. சுற்றுலா செல்வதைப் போன்ற உணர்வைத் தருகின்றது.

அதிலும், குறிப்பாக எம்ஜிஆர் படமான ‘அன்பே வா’-வில் பயன்படுத்தப்பட்ட அந்த பிரம்மாண்ட பங்களாவை மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார் விஜய் கார்த்திக். பங்களாவின் அந்த ‘டாப் ஆங்கில்’ ஷாட் அருமை..

என்றாலும், படத்தொகுப்பில், காட்சிகள் ஆங்காங்கே முழுமை பெறும் முன்னரே வெட்டியிருப்பது சலிப்பை ஏற்படுத்துகின்றது.

ராதனின் இசை ஒகே ரகம். முதல் பாதியில் நம்மை பயமுறுத்துவதில் பின்னணி இசை தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஆனால் பாடல்கள் சுமார் இரகம் தான்.

மொத்தத்தில், டார்லிங் 2 – தடுமாறும் திரைக்கதை! உதவாத காமெடி! பயமுறுத்தாத பேய்!

– ஃபீனிக்ஸ்தாசன்