அனைத்துலக வங்கிகளான டோட்ச் பேங்க் (Deutsche Bank AG), ஜேபி மோர்கன் சேஸ் அண்ட் கம்பெனி (JPMorgan Chase & Co) ஆகிய இரண்டு நிதி நிறுவனங்களும் 1எம்டிபியுடனான தங்களின் தொடர்புகளையும், பணப் பரிமாற்றங்களையும் தெரிவிக்க வேண்டுமென அமெரிக்க அரசாங்கத்தின் சட்டத் துறை கட்டளையிட்டுள்ளது.
அமெரிக்க சட்டத் துறையில் அதிகாரிகள் சிலர் கோலாலம்பூர் வந்து மூத்த வங்கி அதிகாரிகளிடமும், 1 எம்டிபியுடன் தொடர்பு கொண்ட மற்றவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தி விட்டுச் சென்றிருக்கின்றனர் என்றும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இரண்டு நிதி நிறுவனங்கள் மீது தற்போதைக்கு விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மாறாக, பணப் பரிமாற்ற தகவல்கள் மட்டுமே கோரப்பட்டுள்ளன என்றும் ராய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளது.
ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை எந்தத் தரப்பிலிருந்தும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்க அரசாங்கத்தோடு ஏற்கனவே, சுவிட்சர்லாந்து, லக்சம்பெர்க், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 1எம்டிபி தொடர்பான விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கின்றன.