கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நூற்றுக்கணக்கான மஇகா கிளைத் தலைவர்களும், உறுப்பினர்களும், மஇகா தலைமையக வளாகத்தில் ஒரு கொண்டாட்டத்திற்காக ஒன்று திரண்டனர்.
தங்களின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் பிறந்த நாள் விழாவுக்கான கொண்டாட்டம்தான் அது!
நேற்று மஇகா தலைமையகத்தில் தனது கட்சியினரின் வாழ்த்து மழையில் சுப்ரா…
நேற்று தனது 63 வது பிறந்த நாளை, மஇகாவின் அரசியல் சகாக்கள் ஒருபுறம், சக நண்பர்கள், உறவினர்கள் இன்னொரு புறமென அனைவரின் வாழ்த்துகளோடும் டாக்டர் சுப்ரா கொண்டாடி மகிழ்ந்த அந்த மகிழ்ச்சித் தருணங்களில், மஇகாவின் தலைவர் என்ற முறையில் தன் முன்னே விரிந்து, நீண்டு கிடக்கும் அடுத்த கட்ட அரசியல் பயணம் என்பது சவால்களும், கடுமையான எதிர்ப்பு அலைகளையும் கொண்டது என்பதையும் அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார்.
கடந்த 69 வருடங்களாக, மலேசிய இந்தியர்களின் அரசியல் பிரதிநிதியாகவும், சுதந்திரம் முதற்கொண்டு நாட்டை ஆண்டு வரும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஓர் அங்கமாகவும் திகழ்ந்து வரும் மஇகாவை இன்னும் உயரமான வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தலைமையேற்றுக் கொண்டு செல்லும் பெரும் பொறுப்பும், கடமையும் அவரது தோள்களில் தற்போது சுமத்தப்பட்டிருக்கின்றது.
அந்த சவால் மிக்க பாதையில் அவரால் வெற்றிக் கொடி நாட்ட முடியுமா?
இன்னும் 2 ஆண்டுகளில் நாடு பெரும் போராட்டமாக சந்திக்கப் போகும் 14வது பொதுத் தேர்தலில் இந்திய வாக்குகளை மஇகா மூலமாக தேசிய முன்னணிக்கு ஆதரவாக ஒன்று திரட்டி கௌரவான ஒரு வெற்றியை அவரால் பதிவு செய்ய முடியுமா?
கட்சி கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது….
கட்சியின் அனைத்து தலைவர்களின் ஒருமித்த ஆதரவுடன் பிறந்த நாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்ளும் சுப்ரா…
கட்சியைப் பொறுத்தவரை, அரசியல் வியூகம் வகுக்கும் புத்திக் கூர்மை, போராட்டத்தில் பின்வாங்காத தன்மை, அனைவரையும் அரவணைக்கும் போக்கும் போன்ற தலைமைத்துவப் பண்புகள், ஆற்றலால், இன்று, மஇகாவை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார் சுப்ரா.
நீதிமன்ற வழக்குகள், சங்கப் பதிவக மேல்முறையீடுகள், முன்னாள் தேசியத் தலைவர் பழனிவேல் அணியினரின் எதிர்ப்புகள் என அனைத்தையும் தாண்டி வந்துவிட்ட சுப்ரா, அதை விட முக்கியமாக தேசிய முன்னணி தலைமைத்துவத்தின் நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஓர் அம்சம்.
இளம் மருத்துவராக 33 ஆண்டுகளுக்கு முன்னால் புறநகர் பகுதியில் மருத்துவ முகாம் ஒன்றில் இந்தியக் குடும்பத்தினரைக் கவனிக்கிறார்…
இன்று சுகாதார அமைச்சராக, மருத்துவமனை ஒன்றின் வருகையின் போது நோயாளி ஒருவரை நலம் விசாரிக்கின்றார்…
ஓர் மருத்துவராகவும் இருக்கின்ற காரணத்தால் அவரது சுகாதார அமைச்சர் என்ற முறையிலான பணிகளும் பெரும்பாலான தரப்பினரின் நிறைவான பாராட்டுக்களைப் பெற்றிருக்கின்றன.
ஆனால், முன்னாள் தலைவர் பழனிவேலுவின் அணியினர் எனக் கூறிக் கொள்ளும் ஒரு தரப்பினர் இன்னும் கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு சுப்ராவின் தலைமைத்துவத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மஇகாவின் பெரும்பான்மையான கிளைகள் தங்களைத்தான் ஆதரிப்பதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர்.
மீண்டும் கட்சிக்குள் திரும்பி வாருங்கள் என்ற சுப்ராவின் பகிரங்க அழைப்புகளுக்குப் பின்னரும் இன்னும் கட்சிக்கு வராமல் வெளியில் நிற்கும் மஇகா கிளைகளின் எண்ணிக்கை சுமார் 300க்கும் குறைவாகத்தான் இருக்கும் என மஇகா தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளியில் நிற்கும் பழனிவேல் தரப்பினர் தங்கள் அணியினருக்கு பக்க பலமாக நம்பிக்கையூட்டிக் கொண்டிருப்பது – அவர்கள் தற்போது சங்கப் பதிவகத்திற்கும், மஇகாவுக்கும் எதிராக நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கில் வெற்றியடைந்து விடலாம் என்ற ஒரே ஓர் அம்சத்தில் மட்டும்தான்!
ஆனால் அந்த வழக்கில் பழனிவேல் தரப்பினர் வெற்றியடைவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவுதான் – அதனால் சட்டரீதியான தலைமைத்துவ மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பில்லை – என்கின்றன அந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணித்துவரும் சட்டத் துறை வட்டாரங்கள்.
அப்படியே, அதிசயமாக அந்த வழக்கில் பழனிவேல் தரப்பினர் வெற்றி பெற்றாலும், அதனால், தேசிய முன்னணி மீண்டும் பழனிவேலுவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளவும் போவதில்லை என்ற அரசியல் சூழல்தான் தற்போது நிலவுகின்றது.
கட்சியை வளர்க்கும் – சமுதாயப் பிரச்சனைகளைத் தீர்க்கும் பணிகள்
எனவே, அந்த வழக்கைப் பற்றி சுப்ரா கவலைப்படாமல், பழனிவேல் தரப்பினரின் எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு, இந்திய சமுதாயம், கல்வி, சமூகம், பொருளாதாரம் என பல முனைகளிலும் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கும் நோக்கிலும், கட்சியையும், சமுதாயத்தையும் அடுத்த கட்ட உயரத்துக்குக் கொண்டு செல்லும் கடப்பாட்டுடனும் தீவிரமாக செயலாற்றத் தொடங்கியிருக்கின்றார்.
11-அம்ச உருமாற்றத் திட்டம் ஒன்றை உருவாக்கி, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், ஆற்றலை வளர்ப்பதற்கும் கல்வி, தொழில்துறை பங்கேற்பு என இரண்டு அம்சங்களும்தான் அடிப்படை என்ற நோக்கத்தோடு அவற்றை மையமாகக் கொண்டு நாடு முழுக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்னொருபுறத்தில் சுப்ரா தனிப்பட்ட வருகைகளை மேற்கொண்டு நாடு முழுக்க பயணம் செய்து கட்சித் தலைவர்களையும், அடிமட்ட உறுப்பினர்களையும் சந்தித்து, கட்சி விவகாரங்களை கவனிப்பதோடு, சமுதாயத்தின் அத்தியாவசியத் தேவைகளையும் தீர்ப்பதற்கு பாடுபட்டு வருகின்றார்.
தான் மட்டும் இதைச்செய்வது என்றில்லாமல், தனக்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் இத்தகைய பணிகளை ஆற்றக் கட்டளையிட்டிருக்கின்றார். போதாக்குறைக்கு அவர்கள் எங்கெங்கு செல்ல வேண்டும், என்ன செய்யவேண்டும் என்ற திட்டங்களையும் அவர்களுக்குத் தீட்டித் தந்திருக்கின்றார் சுப்ரா என்கின்றன மஇகா வட்டாரங்கள்.
இந்த நோக்கத்தோடு, மஇகா தலைமையகத்தை நாள்தோறும் நாடிவரும் இந்திய சமுதாய மக்களின் தேவைகளின் பூர்த்தி செய்யும் வண்ணம் மஇகா தலைமையகத்தில் சேவை மையம் ஒன்றையும் சுப்ரா ஏற்படுத்தியுள்ளார்.
கட்சியில் கிளைத் தலைவர்களிடையே சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்துவதிலும், நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களுக்கேற்ப கட்சி உறுப்பினர்களைத் தயார்ப்படுத்தும் முயற்சிகளிலும் சுப்ரா தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.
“எப்போதும் என் பின்னால் சுற்றிக்கொண்டு இருப்பதாலும், என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதாலும் நான் மயங்கிவிட மாட்டேன். அப்படிச் செய்வதன் மூலம் என்னிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள்” என கிளைத் தலைவர்களின் கூட்டத்தில் பேசும்போது ஒரு முறை கட்சியினருக்கு நினைவுபடுத்தினார் சுப்ரா.
அவரது உருமாற்ற முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்திய சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் குறிப்பாக அடிமட்டப் பிரிவினர் மஇகாவோடு மீண்டும் மெதுவாக, கட்டம் கட்டமாக இணைய ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த கால மஇகா தலைவர்கள் ஏற்படுத்திய சில அரசியல் சேதாரங்களையும், அவர்கள் சமுதாயத்தின் மத்தியில் தோற்றுவித்திருந்த அவநம்பிக்கைகளையும் சுப்ரா சீர்படுத்த வேண்டிய நிலைமையில் உள்ளார்.
இந்த சிக்கலான அரசியல் சூழ்நிலையில் கட்சிக்கு மீண்டும் புத்துயிர் அளித்து சமுதாயத்தில் மதிப்பை ஏற்படுத்துவதும், நம்பகத்தன்மையை உருவாக்குவதும்தான் சுப்ராவின் முன்னால் விசுவரூபம் எடுத்து நிற்கும் மிகப் பெரிய சவால்!
கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால்…
இளம் வயதில் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் உரையாற்றும் சுப்ரா…
சுப்ரா மஇகா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில் – அடுத்த பத்தாண்டுகளில் அவர் மஇகாவின் தேசியத் தலைவராக உருவெடுப்பார் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அதுவும், பார்ப்பதற்கு சாதுவாக, அமைதியானவராகத் தோற்றம் தரும் சுப்ரா தேசியத் தலைவராகக் கோலோச்சிக் கொண்டிருந்த பழனிவேலுவிடமிருந்தும், அவரது அணியினரிடமிருந்து கடுமையான பலப் பரிட்சையோடு கூடிய ஒரு போராட்டத்தின் மூலம் கட்சியின் தலைமைத்துவத்தை வென்றெடுப்பார் என யாரும் கருதியிருக்க மாட்டார்கள்.
திரும்பிப் பார்த்தால், சுப்ராவின் அசுர அரசியல் வளர்ச்சி என்பதும் அவர் கண்டுள்ள வெற்றிகள் என்பதும், கடுமையான உழைப்பு, அரசியல் சாதுரியம், பிராப்தம் என மூன்றும் கலந்த ஒரு கலவை என்கின்றனர் மஇகா பார்வையாளர்கள்.
பாரம்பரியமும், பழம் பெருமையும் வாய்ந்த குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் சுப்ரா. அவரது தந்தை வழி தாத்தா, வேலுசாமி சேர்வை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி காலத்தின்போது தமிழகத்திலிருந்து வந்து தைப்பிங் நகரில் குடியேறியவர்.
தைப்பிங் தண்டாயுதபாணி ஆலயத்தில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தான் முன்னின்று நடத்திய பங்குனி உத்திர உபயத்தின்போது….
கடந்த மார்ச் 22ஆம் தேதி அதே தைப்பிங் நகருக்கு வருகை ஒன்றை மேற்கொண்டார் சுப்ரா.
அங்கு அமைந்திருக்கும் தண்ணீர்மலை ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் அவரது தாத்தா சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்று நடத்திய பங்குனி உத்திர உபயத்தை – கடந்த 70 ஆண்டுகளாக குடும்ப வழக்கமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த பாரம்பரியத்தை -இந்த ஆண்டும் ஏற்று நடத்துவதற்கான பயணம் அது.
சுப்ராவின் தாத்தா வேலுசாமிக்குப் பின்னர் சுப்ராவின் தந்தையான சதாசிவம் அவர்கள் அந்த உபயத்தைத் தொடர்ந்து ஏற்று நடத்தி வந்தார். இப்போதும் அந்த குடும்பப் பாரம்பரியத்தை விட்டு விடாமல் தொடர்ந்து அந்த தைப்பிங் தண்டாயுதபாணி ஆலயத்தின் பங்குனி உத்திர உபயத்தை தனது குடும்பத்தினருடன் இணைந்து ஆண்டுதோறும் ஏற்று நடத்தி வருகின்றார் சுப்ரா.
தைப்பிங் தண்டாயுதபாணி ஆலயத்தில் நடத்திய பங்குனி உத்திர உபயத்தின் போது, அன்னதானம் தயாரிப்பதில் கைகொடுக்கும் சுப்ரா….
“இதுதான் அவரது பலம். தனது குடும்பம் மற்றும் சார்ந்துள்ள சமுதாயத்தின் பாரம்பரியம், பழம் பெருமைகள், மத நம்பிக்கைகள் ஆகியவை தொடர்ந்து பேணப்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர் சுப்ரா” என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
அதே போன்று ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின் போது மலாக்காவிலுள்ள சன்னாசி கோவிலுக்குச் செல்வதும் அங்கு திருவிழாவில் கலந்து கொண்டு வெறும் காலுடன் நடைப் பயணம் மேற்கொள்வதும் அவர் தவறாது மேற்கொண்டு வரும் மற்றொரு வழக்கம் என்கின்றனர் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.
சைவ உணவுப் பழக்கத்தையும், அட்டவணைப் படி நேரம் தவறாமல் செயலாற்றும் நடைமுறைகளையும் கடுமையாகப் பின்பற்றுபவர் சுப்ரா என்பதும் மஇகா வட்டாரங்களில் ஏற்கனவே அவரைப் பற்றி அனைவருக்கும் நன்கு தெரிந்த கூடுதல் விவரங்கள்!
ஆரம்பக் கல்வியும் மருத்துவத் தொழிலும்!
அவரது முன்னோர்களின் தொடக்கம் தைப்பிங் நகரில் என்றாலும், தந்தையின் பணி காரணமாக தனது கல்வியை பினாங்கு பிரி ஸ்கூல் எனப்படும் பள்ளியில் படித்தார் சுப்ரா. புகழ் பெற்ற தலைவர்கள் பலரும் படித்த பெருமை வாய்ந்தது இந்தப் பள்ளி.
இந்தோனேசியாவில் நடைபெற்ற அனைத்துலக மாநாடு ஒன்றில் இந்து இளைஞர் இயக்கத்தின் பிரதிநிதியாக சுப்ரா கலந்து கொண்டபோது…
பள்ளி காலத்தில் கல்வியில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்ற அதே வேளையில், பள்ளியின் பேச்சுப் போட்டிகளிலும், பட்டிமன்றங்களிலும் அவர் பிரகாசித்தார்.
ஆசியாவின் முன்னணி பல்கலைக் கழகங்களில் ஒன்றாகவும் – சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்க்கும் வழக்கத்தையும் கொண்டிருக்கும் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படிக்கும் அரிய வாய்ப்பு சுப்ராவுக்கு கிடைத்தது.
மருத்துவப் படிப்பை முடித்து விட்டு, அரசாங்க மருத்துவமனைகளில் சில ஆண்டுகாலம் பணியாற்றி விட்டு, தோல்வியாதி நிபுணராக சொந்த மருத்துவத் தொழிலைக் கவனித்துக் கொண்டு மலாக்காவில் வசித்து வந்த சுப்ரா, அங்கு இந்து இளைஞர் இயக்கத்திலும், இந்து சங்கம், மற்றும் சில அரசு சார்பற்ற இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சமூக சேவையாற்றி வந்தார்.
மலாக்கா மாநில மஇகாவில் ஒரு கிளைத் தலைவராக இருந்தாலும், அரசியல் வட்டாரங்களில் அவ்வளவாக பிரபலமில்லாமல் இருந்த சுப்ரா, 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் செகாமாட் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக சாமிவேலுவால் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் மஇகா வட்டாரங்களில் பிரபலமானார்.
செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக…
2004ஆம் ஆண்டில் மஇகா தேசியத் துணைத் தலைவராகவும், செகாமாட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் இருந்த டத்தோ (இப்போது டான்ஸ்ரீ) சுப்ராவுக்கு, சாமிவேலு அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை மறுக்க, அவருக்குப் பதிலாக செகாமாட் தொகுதியில் களமிறக்கப்பட்டவர்தான் டாக்டர் சுப்ரா.
அதன் காரணமாக, அந்த கால கட்டத்தில் டான்ஸ்ரீ சுப்ராவின் ஆதரவாளர்கள் பலர் டாக்டர் சுப்ராவை எதிர்ப்புணர்வோடுதான் பார்த்து வந்தனர். ஆனால், காலப்போக்கில் அவர்களுடன் அணுக்கம் பாராட்டியதன் காரணமாக, தனது செயல்பாடுகள், அரவணைப்பு காரணமாக அவர்களையும் தன்பக்கம் ஈர்த்தார் சுப்ரா. டான்ஸ்ரீ சுப்ராவின் தீவிர ஆதரவாளர்கள் பலர் இன்று டாக்டர் சுப்ராவின் ஆதரவாளர்களாக இருக்கின்றார்கள் என்பதுதான் கடந்தாண்டுகளில் மாறியிருக்கும் அரசியல் நிலைமைக்கான எடுத்துக்காட்டு.
2004ஆம் ஆண்டில் முதன் முதலாக செகாமாட்டில் போட்டியிட டாக்டர் சுப்ராவுக்கு சாமிவேலு அழைப்பு விடுத்தபோது, அவர் அவ்வளவாக ஆர்வமோ, உற்சாகமோ காட்டவில்லை என்கின்றனர் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.
தனக்குப் பிடித்தமான மருத்துவத் தொழில், அதன் மூலம் கைநிறையக் கிடைத்து வந்த சீரான வருமானம் இரண்டையும் இழந்து விட்டு, நிச்சயமில்லாத, எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது தெரியாத அரசியல் பாதையில் கால்வைக்க அவர் முதலில் தயங்கினார் என்றுதான் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
செகாமாட் தொகுதிக்கு சுப்ரா வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது கூட அவர் ‘சுப்ரமணியம்’ என்ற பெயரைக் கொண்டிருக்கும் காரணத்தால்தான் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார் (அவருக்கு முந்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரும் சுப்ரமணியம் என்பதால்) மற்றபடி அவர் ஒன்றும் அத்தனை பெரிய திறமைசாலி அல்ல என்பது போன்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
ஆனால், கால ஓட்டத்தில், தனது பெயருக்குப் பின்னால், ஒளிந்து கிடந்த – தனக்குள் நிறைந்து கிடந்த – தனது அரசியல் திறமைகளையும், செயல்பாட்டுத் திறனையும் வெளிக்காட்டி அரசியல் அரங்கில் முன்னுக்கு வரத் தொடங்கினார் அவர்.
செகாமாட் வெற்றிக்குப் பின் அமைச்சுப் பணிகள்…
2004ஆம் ஆண்டில், செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக வெல்வது அவ்வளவு சிரமமாக இல்லை சுப்ராவுக்கு. காரணம் அந்த ஆண்டில்தான் மகாதீருக்குப் பின் தலைமையேற்ற படாவியின் தலைமைத்துவத்தின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை காரணமாக, ஏறத்தாழ 90 சதவீத தொகுதிகளில் தேசிய முன்னணி வெற்றி வாகை சூடியது.
செகாமாட்டில் வெற்றி பெற்றதும் வீடமைப்புத் துறை அமைச்சில் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார் சுப்ரா.
ஆனால், 2008ஆம் ஆண்டில் நிகழ்ந்த அதிரடி அரசியல் மாற்றங்கள்தான் சுப்ராவின் வாழ்க்கையிலும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி, அவரது அரசியல் பயணத்தையும் புரட்டிப் போட்டது.
அரசியல் சுனாமி அந்த 2008ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வீசியடித்த காரணத்தால், மஇகாவின் தேசியத் தலைவர் சாமிவேலு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியிலும், துணைத் தலைவர் பழனிவேலு உலு சிலாங்கூர் தொகுதியிலும் தோல்வியைத் தழுவினர்.
ஆனால், அந்த அரசியல் சுனாமி, ஜோகூர் மாநிலத்தை அவ்வளவாகத் தாக்காத காரணத்தால், கடுமையான போட்டிக்கிடையிலும், செகாமாட் தொகுதியில் மீண்டும் வென்றார் சுப்ரா.
அதன்காரணமாக, வேறுவழியின்றி சாமிவேலுவின் அமைச்சர் பதவிக்குப் பதிலாக சுப்ரா மனித ஆற்றல் துறை அமைச்சராக நியமனம் பெற்றார். அந்த காலகட்டத்தில் மஇகாவில் இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என யாருமே கற்பனை செய்திருக்கவில்லை.
இங்குதான், அதிர்ஷ்டமோ, பிராப்தமோ, தலையெழுத்தோ, ஏதோ ஒன்று சுப்ராவில் வாழ்க்கையிலும் விளையாடி அவரை அமைச்சராக உயர்த்தியது. ஆனால், அவரும் அதை வெறும் அதிர்ஷ்டம் என எடுத்துக்கொள்ளாமல், அரசாங்கத்துக்கும், சமுதாயத்திற்கும் சேவை புரிய தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதி அமைச்சுப் பணிகளில் சிறப்பாக பரிணமிக்கத்தொடங்கினார். இதனால்தான் தேசிய முன்னணி வட்டாரத்தில் நற்பெயரையும், நன்மதிப்பையும் அவர் பெற்றார் என்றும் – பிற்காலத்தில் பழனிவேலுவுடனான தலைமைத்துவப் போராட்டத்தின்போது தேசிய முன்னணி தலைமைத்துவமும் சுப்ரா மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டதற்கான காரணமும் அதுதான் என்கின்றன மஇகா வட்டாரங்கள்.
கட்சியின் துணைத் தலைவராக….
மஇகாவின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கும் சுப்ரா 2009இல் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
தேசிய முன்னணிக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டபோது…
2010ஆம் ஆண்டில் சாமிவேலு பதவி விலகிச்செல்லும் தருணம் வந்தபோது, பழனிவேலு இயல்பாகவே இடைக்கால தேசியத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட, சாமிவேலு நேரடியாக தலையிட்டு, சுப்ராவை இடைக்கால தேசியத் துணைத் தலைவராக நியமித்து விட்டுத்தான் பதவி விலகினார். அப்போதே, சுப்ராவின் தலைமைத்துவ ஆற்றலை ஒருவேளை சாமிவேலுவும் உணர்ந்திருக்கலாம்!
அதன் பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழனிவேலுவுக்கும் சுப்ராவுக்கு இடையில் சுமுகமான, இணக்கமான போக்கே நிலவியது.
2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் சுப்ரா எதிர்நோக்கிய மற்றொரு சவால் மிக்க தேர்தல். மசீசவிலிருந்து விலகி ஜோகூர் மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய சுவா ஜூய் மெங் செகாமாட் தொகுதியில் போட்டியில் குதிக்க, அந்தக் கடுமையான போட்டியில் 1,217 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார் சுப்ரா.
அதைத் தொடர்ந்து, 2013 நவம்பரில் நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல் பழனிவேலுவுக்கும் சுப்ராவுக்கு இடையில் பெரும் பிளவை உண்டாக்கி, கட்சியை இரண்டு அணிகளாகப் பிரித்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மஇகா மறுதேர்தல்களின்போது வாக்களிக்கச் செல்லும் சுப்ராவும், மற்ற தலைவர்களும்…
அதைத் தொடர்ந்த போராட்டங்களின் இறுதிக் கட்டத்தில், தன் பின்னால் அணி வகுத்து நின்ற அணியினரின் ஆதரவு, இந்திய சமுதாயத்தின் வரவேற்பு, தேசிய முன்னணிக்கு ஏற்பட்ட நம்பகத் தன்மை, சொந்த அரசியல் சாதுரியம், சங்கப்பதிவகம் மற்றும் நீதிமன்றங்களின் முடிவுகள் – என இவை அனைத்தும் சாதகமாக ஒன்றிணைந்ததன் காரணமாக சுப்ராவின் தலைமைத்துவம் மஇகாவில் நிலைநிறுத்தப்பட்டது.
63வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் சுப்ராவின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அரசியல் பயணம்தான் அவரது எதிர்காலத்தையும், கட்சியின் எதிர்காலத்தையும் முடிவு செய்யப் போகின்றது.
பழனிவேலு அணியினரின் எதிர்ப்புகளை சமாளிப்பது ஒரு புறம் இருக்க – வரப்போகும் 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக இந்திய வாக்குகளை ஒன்று திரட்ட வேண்டிய சவால் மிக்க பெரும்பணி சுப்ராவுக்குக் காத்திருக்கின்றது. 1எம்டிபி விவகாரத்தால் பாதாள நிலைமைக்குப் போய்விட்ட நஜிப்பின் தலைமைத்துவத்தை வைத்துக் கொண்டு, இந்திய வாக்குகளைத் திரட்ட வேண்டியது எவ்வளவு சிரமம் என்பதை விவரிக்கத் தேவையில்லை.
இந்தியப் பிரதமரின் மலேசிய வருகையின்போது கட்சியினருடன் மோடி நடத்திய சந்திப்பில்…
அதே சமயத்தில் கட்சியிலும் சில சீர்திருத்தங்களை அவர் செய்ய வேண்டியதுள்ளது. இதற்காக அவர் மஇகா அமைப்பு விதிகளில் சில திருத்தங்கள் செய்யவேண்டும் – அதற்கான ஆதரவைப் பேராளர்களிடமிருந்து பெற வேண்டும்.
தற்போதைக்கு, மஇகாவின் அடுத்த உட்கட்சித் தேர்தலை பொதுத் தேர்தலுக்குப் பின் ஒத்தி வைப்பதில் சுப்ரா வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், கட்சியினரிடையே அரசியல் புகைச்சல்கள், பிணக்குகள் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டு ஆண்டுகள் கழித்து 2018ஆம் ஆண்டில் சுப்ராவின் பிறந்த நாள் கொண்டாடப்படும் ஏப்ரல் 1ஆம் தேதி வாக்கில், அநேகமாக நாட்டின் பொதுத் தேர்தலும் நடத்தப்படும் சூழ்நிலை வந்து விடும்.
அந்தத் தேர்தலில் எந்த அளவுக்கு மஇகா வெற்றிகளை குவிக்கப் போகின்றது – எந்த அளவுக்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவைப் பெறப் போகின்றது – என்பதை வைத்துத்தான் சுப்ராவின் தலைமைத்துவம் மற்றும் மஇகாவின் எதிர்காலம் இரண்டின் தலைவிதியும் நிர்ணயிக்கப்படும்.
-இரா.முத்தரசன்