சென்னை – தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆம் ஆத்மி கட்சியினரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். சென்னை தி.நகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வைகோ நேற்று சென்றார்.
அங்கு அந்தக் கட்சியின் நிர்வாகி வசீகரனை சந்தித்து கூட்டணியில் சேர அழைப்பு விடுத்தார். அப்போது ஆம் ஆத்மியின் ஆதரவு கேட்டு அதன் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதத்தையும் அளித்தார். இந்நிலையில், கெஜ்ரிவால் வைகோவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் ஆம் ஆத்மி கட்சி தற்போதைய நிலையில் தமிழகத்தில் யாருக்கும் ஆதரவு அளிக்க இயலாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், நீங்கள் எழுதிய மார்ச் 31 ஆம் தேதியிட்ட கடிதம் கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சி தமிழக அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஊழலுக்கு எதிரான போராட்டங்களாலே ஆம் ஆத்மி கட்சி எழுச்சி பெற்றது உங்களுக்கு தெரியும். இந்திய அரசியலில் ஊழலே பிரதானமாக இருக்கும் நிலையில், அதை அறவே நீக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது.