ரெய்ஜாவிக் – பனாமா பேப்பர்ஸ் கருப்பு பண விவகாரத்தால் தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்டோருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்காவில் பனாமா நாடு உள்ளது. கேளிக்கைக்கு புகழ் பெற்ற பனாமா நாடு பணத்தை பதுக்கி வைக்கும் இடமாக மாறியுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த மொசாக் பொன்செக்கா என்ற சட்ட நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 35 நாடுகளில் கிளைகள் உள்ளன.
பெரும் தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் மொசாக் பொன்செக்கா நிறுவன உதவியுடன் ஒரு நிறுவனத்தை தொடங்கி பனாமா வங்கியில் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.
அந்த நிறுவனம் பெயரளவில் இருந்தால் போதும். செயல்பட வேண்டிய அவசியமில்லை. அவரவர் தொடங்கும் நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் போடப்பட்டு வரிஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மொசாக் பொன்செக்கா நிறுவனம் பராமரித்து வந்த ரகசிய ஆவணங்களை ஜெர்மனியை சேர்ந்த நாளிதழ் அண்மையில் வெளியிட்டது. ‘பனாமா லீக்ஸ்’ என்றழைக்கப்படும் இந்த ரகசிய ஆவண தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 12 நாடுகளின் இந்நாள், முன்னாள் அரசியல் தலைவர்களின் பெயர்கள் பனாமா லீக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ரஷ்ய அதிபர் புடினின் பெயர் பட்டியலில் இல்லை. ஆனால் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அவரது பினாமிகளாக கருதப்படும் செர்ஜி ரோல்டுகின் உள்ளிட் டோரின் பெயர்கள் பட்டியலில் உள்ளன.
அவர்கள் மூலம் அதிபர் புடின் 2.5 பில்லியன் டாலதுக்கும் அதிகமான கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் மறுத்துள்ளார்.
இதேபோல், பிரிட்டின் பிரதமர் டேவிட் கேமரூனின் மறைந்த தந்தை இவான் கேமரூன் பனாமா நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளார். இதனால் டேவிட் கேமரூனும் சிக்கலில் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறியபோது, இது கேமரூன் குடும்பத்தினரின் தனிப்பட்ட விவகாரம், வரிஏய்ப்பில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பிரதமர் கேமரூன் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகள் மரியம், மகன்கள் ஹாசன், ஹூசைன் ஆகியோரின் பெயர்களில் பல நிறுவனங்கள் செயல்படுவதாக பனாமா லீக்ஸ் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் மூவரும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பிடிஐ கட்சித் தலைவர் இம்ரான் கான் உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த வரிசையில், அர்ஜென்டீனாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி குடும்பத்தினரின் பெயர்கள் பனாமா லீக்ஸ் பட்டியலில் உள்ளது. மெஸ்ஸி மீது ஏற்கெனவே பல்வேறு வரிஏய்ப்பு புகார்கள் எழுந்துள்ள நிலையில் பனாமா லீக்ஸ் ஊழல் அவருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அர்ஜென்டீனா அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.
இவர்கள் தவிர உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ அர்ஜென்டீனா அதிபர் மவுரிசியோ மக்ரி, சவுதி மன்னர் சல்மான், ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் காலிபா பின் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் உள்ளிட்டோரின் பெயர்களும் பட்டியலில் உள்ளன. இதனால் கருப்பு பண புயல் தற்போது சுவிட்சர்லாந்தில் இருந்து இடம்பெயர்ந்து பனாமாவில் மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.