கோலாலம்பூர் – மலேசியாவைச் சேர்ந்த பிரபல விமானம் ஒன்றில் வழங்கப்பட்ட நாசி லெமாக் உணவில் பல்லி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 27-ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து கூச்சிங் செல்லும் அந்த விமானத்தில், தனக்கு வழங்கப்பட்ட நாசி லெமாவை ஆவலோடு சாப்பிட்ட அவான் வாசீம் என்ற 27 வயது பயணி, அதில் விரும்பத்தகாத சுவை ஒன்று இருப்பதை உணர்ந்துள்ளார்.
பின்னர், தான் சாப்பிட்ட உணவில் பல்லியும் இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக விமானத்தின் கழிவறைக்குச் சென்று வாந்தி எடுத்துள்ளார்.
“நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, எனது உணவில் பல்லி இருந்ததைக் கண்டேன். நான் உடனடியாக விமானப் பணியாளரிடம் அதைத் தெரிவித்தேன். அவர் எனது உணவை மாற்றித் தருகிறேன் என்று கூறினார்”
“ஆனால் நான் மறுத்துவிட்டேன். கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் இறங்கியவுடன், நேரடியாக காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தேன்” என்று அவாங் வாசீம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவாங் வாசீம் அளித்த புகாரும், நாசி லெமா புகைப்படமும் “ஓ மீடியா” என்ற பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் தன்னை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, கூச்சிங்கிலிருந்து கோலாலம்பூருக்கு திரும்பி வர இலவசமாக டிக்கெட் தருவதாகக் கூறியதாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் அவான் வாசீம் மலேசியாகினி இணையதளத்திடம் கூறியுள்ளார்.
“நான் அதை மறுத்துவிட்டேன். எனது உயிரின் விலை வெறும் விமான டிக்கெட் அளவில் தான் என்று நினைக்கிறார்களா? நான் இதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வேன்” என்று அவான் வாசீம் தெரிவித்துள்ளதாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.