புத்ராஜெயா – தாமான மாங்கிஸ் நிலம் தொடர்பாக நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான் மற்றும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ஆகியோருக்கு இடையில் நடக்கவிருக்கும் பொதுவிவாதத்தை நேரலையாக ஒளிபரப்பத் தயார் என்று ரேடியோ டெலிவிசன் மலேசியா (ஆர்டிஎம்) அறிவித்துள்ளது.
‘ஜனநாயகம் (Democracy)’ என்ற தங்களது நிகழ்ச்சியின் வாயிலாக இந்த விவாதத்தை ஒளிபரப்புவோம் என்று தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சையட் கெருவாக் தெரிவித்துள்ளார்.
“அவர்களின் கோரிக்கையை ஏற்று விவாதத்தை நேரலையாக ஒளிபரப்பத் தயார். நிகழ்ச்சி சுமூகமாக நடைபெற இந்த விவாதம் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படும்” என்று நேற்று பெர்னாமாவிற்கு அளித்த பேட்டியில் சாலே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அப்துல் ரஹ்மான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “தாமான் மாங்கிஸ்(நிலம்) விவகாரத்தில் பொது விவாதத்தை நான் வரவேற்கிறேன். எனது அதிகாரிகள் உங்கள் தரப்பில் இருந்து விளக்கம் கேட்பார்கள். தாமான் மாங்கிஸ் ஊழல் விவகாரத்தில் மறைந்துள்ள உண்மைகளை பினாங்கு மக்கள் அறிய இந்த விவாதம் அனுமதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, அப்துல் ரஹ்மான் லிம் குவான் எங்கிற்கு விடுத்த சவாலில், இந்த விவகாரத்தில் தன்னிடம் உள்ள தகவல்களை பொதுவில் வெளியிடுவதில் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
கடந்த வியாழக்கிழமை அந்தச் சவாலை ஏற்றுக் கொண்ட லிம் குவான் எங், மறைப்பதற்கு தன்னிடம் எந்த ஒரு விசயமும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று இரவு டுவிட்டரில் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட தகவலில், “நான் இன்றிரவு வெளிநாடு செல்கிறேன். இது முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று. இந்தப் பயணம் முடிந்த பின்னர் விவாதிப்போம்” என்று தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அப்துல் ரஹ்மான் வரும் ஏப்ரல் 15-ம் தேதி தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புவார் என்றும், அதன் பின்னர் விவாதம் நடக்கும் என்றும் அவர் தரப்பில் கூறப்படுகின்றது.