கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை வெளியேற்ற முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் அனைத்துலகத் தலையீட்டை நாடி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
“வழக்கமாக மலேசிய விவகாரங்களில் வெளிநாட்டினரை தலையீட்டை நான் விரும்புவதில்லை. ஆனால் குறைகளைத் தீர்க்கத் தேவையான வழிகள் யாவைவும் முற்றிலும் மூடப்பட்டுவிட்டன. (கட்சிக்குள்ளும், வெளியே விமர்சிப்பவர்களைத் தண்டிக்கும் கடுமையான கறுப்புச் சட்டங்களும்)” என்று மகாதீர் கூறியுள்ளதாக ‘த வீக்எண்ட் ஆஸ்திரேலியன்’ பத்திரிகை கூறுகின்றது.
மேலும், மலேசியாவில் நிலவி வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், “மலேசியப் பிரதமரை தொந்தரவு செய்ய ஆஸ்திரேலிய அரசாங்கம் விரும்பவில்லை போல் தெரிகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மகாதீரின் இந்த அறிக்கை எப்படி பார்க்கப்படுகின்றது என்றால், தனது ஆட்சிக் காலத்தில் மலேசிய விவகாரங்களில் அந்நியத் தலையீடுகள் இருக்கக் கூடாது என்று கண்டிப்பாக இருந்தவர் தற்போது இந்த அறிக்கையின் மூலம், மலேசிய ஊழல் விவகாரங்கங்களில் அண்டை நாடான ஆஸ்திரேலியா தலையிட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.