Home Featured கலையுலகம் குற்றப்பரம்பரை விவகாரம்: பாரதிராஜாவுக்கு பாலா எச்சரிக்கை!

குற்றப்பரம்பரை விவகாரம்: பாரதிராஜாவுக்கு பாலா எச்சரிக்கை!

913
0
SHARE
Ad

bharathiraja longசென்னை – குற்றப்பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பாரதிராஜாவுக்கும் ரத்னகுமாருக்கும் எச்சரிக்கை செய்வதாக இயக்குநர் பாலா கூறியுள்ளார். குற்றப்பரம்பரை படத்தை யார் எடுப்பது என்பதில் இயக்குநர் பாலா மற்றும் பாரதிராஜா இடையே கடுமையான போட்டி நிலவிவந்தது.

இதையடுத்து இப்படத்தை மதுரை அருகே உள்ள பெருங்காமநல்லூரில் பூஜையுடன் தொடங்கினார் இயக்குநர் பாரதிராஜா. இந்நிலையில் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குநர் பாலா. அப்போது பாரதிராஜா மற்றும் ரத்னகுமாருக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், குற்றப்பரம்பரை பட விஷயத்தில் நான் மிகவும் காயப்பட்டிருக்கிறேன். கூட்டாஞ்சோறு என்று வேல ராமமூர்த்தி எழுதிய கதை, அடுத்த பதிப்பில் குற்றப்பரம்பரை என்று வெளியானது. அந்தக் கதையின் ஒரு விஷயத்தை நான் திரைக்கதையாக்கி படமாக எடுக்கப் போகிறேன்.

#TamilSchoolmychoice

ஆனால், பாரதிராஜா, ரத்னகுமார் கூட்டணி எடுப்பது நடந்த வரலாறு. நீங்கள் வரலாற்றை எடுக்கிறீர்கள். நான் கதையை படமாக எடுக்கிறேன். ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை யார் வேண்டுமானாலும் படமாக எடுக்கலாம். அப்படி ஒரு விஷயத்தைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். நான் செய்வது வேறு. கதையைப் படமாக்குவது.

ஏற்கனவே இதுசம்பந்தமாக பாரதிராஜா என்னிடம் பேசியபோதே நான் குற்றப்பரம்பரை வரலாற்றை படமாக எடுக்கவில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகும் பாரதிராஜா என் எச்சிலை பாலா தின்னமாட்டான் என்று நினைக்கிறேன் என்று பேட்டி கொடுத்தார்.

சென்ற வாரம் தனஞ்செயன் என்னை அழைத்து, குற்றப்பரம்பரை படத்திற்கு பாரதிராஜா பூஜை போடுகிறார் என்று சொன்னபோதுகூட,என்னை அழைத்தால் நானும் பூஜைக்கு நிச்சயம் வருவேன் என்றுதான் தனஞ்செயனிடம் சொன்னேன். அதை தனஞ்செயனும் பாரதிராஜாவிடன் சொல்லியிருக்கிறார்.

அதற்கு, பாரதிராஜா அப்படியா சொன்னான்? எனக்கு அதிர்ச்சியாக இருக்கே. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. கூப்டலாமா வேணாமான்னு யோசிக்கணும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ரத்னகுமாரோ, பாலா படப்பிடிப்பிற்கு வரட்டும். வந்து ஷூ தொடைக்கட்டும் என்றும், பாலா ஒரு கதைத் திருடன், பாலாவுக்கு கூறு கிடையாது என்றெல்லாமும் பேசுகிறார்.

ரத்னகுமார் தொடர்ந்து இதுபோல என்னை அவதூறாகப் பேசுவதை, பாரதிராஜா கண்டும் காணாமல் இருப்பது அவர் இவற்றை அனுமதிப்பது போலவே தெரிகிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம், பாரதிராஜாவுக்கும் ரத்னகுமாருக்கும் எச்சரிக்கை செய்கிறேன்.

நீங்கள் உங்கள் படத்தை எடுங்கள். நான் என் படத்தை எடுக்கிறேன். இதற்கிடையில் என்னைக் காயப்படுத்துவது, உங்களுக்கு நல்லதல்ல. மேற்கொண்டு எதுவும் என்னைப் பற்றியோ, என் படத்தைப் பற்றியோ பேசாதீர்கள் என்றார் பாலா. இந்த சந்திப்பின்போது தயாரிப்பாளர் தனஞ்செயனும் உடனிருந்தார்.