Home One Line P2 பாரதிராஜா தலைமையில் புதிய “தயாரிப்பாளர்கள் சங்கம்’ உதயம்

பாரதிராஜா தலைமையில் புதிய “தயாரிப்பாளர்கள் சங்கம்’ உதயம்

692
0
SHARE
Ad

சென்னை : தமிழ்த் திரையுலகின் கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற முறையில் மூத்தவராகப் பார்க்கப்படுபவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

நடிகர் விஷால் தலைமையிலான தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு காரணங்களாலும், நீதிமன்ற நடவடிக்கைகளாலும் முடங்கிக் கிடக்கும் நிலையில், புதிய தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடக்கியிருக்கிறார் பாரதிராஜா .

“என் இனிய தயாரிப்பாளர்களே… கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம், வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. எப்படி வலிக்குமோ அப்படித்தான் புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது. தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ, அதே வலி பிள்ளைக்கும் இருக்கும். தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெருவலியை இங்கு யாருமே பேசுவதில்லை. கருத்து வேறுபாடுகள் அதன் வலியை, அப்பிள்ளை வெளிப்படுத்தாததால், அவ்வலியை உணராமலே போய்விடுகிறோம். ஆனாலும் நான் வெளிப்படுத்தத் தெரிந்த குழந்தை. இன்னொரு சங்கம் என்ற குழந்தை முயற்சி எனக்கு வலிக்கவே செய்கிறது. வலிக்க வலிக்கவே பிறக்க வேண்டியதும் அவசியமாகிறது” என இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பாரதிராஜா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது. ஒரு மடை அடைத்துக் கொண்டால் இன்னொரு மடையைத் திறப்பது போல்தான் இதுவும். நாம் செயல்பட்டே ஆண்டுகளாகி விட்டன. பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக் குறி எல்லாவற்றிற்கும் பதில் தேடுவது முக்கியம். எவ்வளவு நாள் காத்திருப்பது? தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவள் அப்படியே மெருகுற இருப்பாள். திரை வீட்டின் ஆளுமை அவள்தான். அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை. இது செயல்பட வேண்டிய காலகட்டம். கொரானாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது. கையைப் பிசைந்து கொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது? உறுப்பினர் சேர்க்கை அதனால் ‘தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள்’ சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் பாரதிராஜா தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

“நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து மற்ற நிர்வாகிகள் குழுவினர் விவரம் பின்னர்அறிவிக்கப்படும். பாரதிராஜாவாகிய எனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குகிறோம். சினிமாவின் ஆரோக்கியம் இதைப் பிரித்தாள்கிறோம் என யாரும் நினைக்க வேண்டாம். சில முக்கிய முடிவுகளுக்காய் உழைக்க இருக்கிறோம். நிறைவாக சொல்வதென்றால், இப்பிறப்பின் செயல்பாடுகள் சினிமாவின் ஆரோக்கியம் கருதியே தொடங்குகிறது! பிள்ளைகளும், தோழர்களும், இணை வயதினரும், என்னை மூத்தோரும் இந்த அவசியத்தை இக்கட்டான சூழல் கருதி புரிந்துகொள்ள வேண்டுகிறேன்” என்றும் பாரதிராஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.