Home One Line P2 “பாரதிராஜாவின் கண்கள்” எனப் பாராட்டப்பட்ட ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

“பாரதிராஜாவின் கண்கள்” எனப் பாராட்டப்பட்ட ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

1120
0
SHARE
Ad

சென்னை – ஒரு காலத்தில் பாரதிராஜா தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திர இயக்குநராக உலா வந்த காலத்தில் அவருடன் இணைந்து பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பி.கண்ணன்.

பாரதிராஜா எடுக்க நினைக்கும் காட்சிகளை அப்படியே ஒளி ஓவியங்களாகத் தீட்டித் தருபவர் என்ற காரணத்தால் “பாரதிராஜாவின் கண்கள்” எனப் பாராட்டப்பட்டவர்.

அந்த பி.கண்ணன் இன்று பிற்பகல் (ஜூன் 13) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.

#TamilSchoolmychoice

பாரதிராஜா இயக்கிய படங்களில் ‘நிழல்கள்’ தொடங்கி ‘பொம்மலாட்டம்’ வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அந்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று பிற்பகல் காலமானதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

கண்ணனின் குடும்பம் பாரம்பரிய சினிமாப் பின்னணி கொண்டது. இவரது தந்தையார்தான் இயக்குநர் பீம்சிங். பாசமலர், பாகப்பிரிவினை என “பா” வரிசையில் பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் பீம்சிங். சிவாஜியின் கதாபாத்திரங்களை வடிவமைத்ததிலும், செதுக்கியதிலும் முக்கியப் பங்காற்றியவர் பீம்சிங்.

கண்ணனின் சகோதரர் பி.லெனின் இந்தியத் திரையுலகின் முன்னணி படத் தொகுப்பாளர் (எடிட்டர்) ஆவார்.

கண்ணன் இதுவரையில் சுமார் 50 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருப்பார். அதில் 40 படங்கள் பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவானவையாகும்.

‘அலைகள் ஓய்வதில்லை’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’ போன்ற படங்கள் பாரதிராஜாவின் இயக்கத்தில் கண்ணனின் கைவண்ணத்தைக் காட்டிய படங்களாகும்.