கோலாலம்பூர் – தாமான் மாங்கிஸ் நில விவகாரம் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணையின் கீழ் இருப்பதால், அந்த விவகாரம் தொடர்பான விவாதத்தை நேரலையாக ஒளிபரப்புவதாக அறிவித்துள்ள தொலைக்காட்சிகள், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறு தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான் மற்றும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ஆகியோருக்கு இடையில் பொதுவிவாதம் நடந்தால், அது விசாரணையை பாதிப்பதோடு, இந்த வழக்கும், சாட்சிகளும் பாரபட்சமாக அமைய வாய்ப்புள்ளது என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு காலிட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், மாங்கிஸ் பங்களா பொதுவிவாதம் இரத்து செய்யப்பட வேண்டும். காவல்துறையின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் உட்பட சாட்சிகள் இன்னும் அழைக்கப்படவில்லை. இந்த வழக்கு முடிவுக்கு வருவதற்குள், நேரலையாக ஒளிபரப்புவதாக அறிவித்துள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் அதனை இரத்து செய்யும்படி கூறுங்கள்” என்று காவல்துறைக்கு கட்டளையிட்டுள்ளார்.