சென்னை – நமீதாவின் சமீபத்திய அரசியலால், தேர்தல் களத்தில் நிற்கும் பல அரசியல் கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சி. காரணம், அவர் அதிமுகவில் இணைந்திருப்பதால் அவருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு. நேற்று திருச்சியில் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் இணைந்தார்.
இதுகுறித்து நடிகை நமீதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஏன் அதிமுகவில் இணைந்தீர்கள்? என்ன காரணம்? என நமீதாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது; “நான் தேர்தலுக்காக அதிமுகவில் சேரவில்லை. நீண்ட நாட்களாகவே தமிழ் நாட்டில் வாழ்வதால், தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறேன்”.
“காரணம் இந்த நமீதாவை இந்த அளவுக்கு ஆளாக்கி விட்டவர்கள் தமிழ் மக்கள். என் வீடு சென்னையில்தான். என் குடும்ப அட்டை சென்னையில்தான். நான் வாக்களிப்பதும் சென்னையில்தான். எல்லாமே எனக்கு சென்னைதான்”.
“இதுதான், இனி என் ஊர் என எப்போதோ முடிவு செய்துவிட்டேன். நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றதும் பல கட்சிகள் என்னைத் தொடர்பு கொண்டன. ஆனால் நான் அதிமுகவில்தான் சேர வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். அதனால் என்னை அழைத்த எந்தக் கட்சிக்கும் நான் பதில் கூறவில்லை.”
“புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சி முறை, அவரது தலைமை, எந்த சோதனையிலும் உறுதியாக நிற்கும் இரும்புப் பெண்மணி என்ற அவரது மனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனது முதல் அரசியல் வழிகாட்டியாக அவரைத்தான் நான் நினைக்கிறேன்”.
“அதனால்தான் அதிமுகவில் சேர்வதாக முடிவு செய்து வைத்திருந்தேன். நானே விரும்பி கடிதம் கொடுத்தேன். அம்மாவின் அழைப்புக்காகக் காத்திருந்தேன். அதிமுகவில் நானும் ஒரு அங்கமாகிவிட்டேன். அவ்வளவுதான். இனி அம்மாவின் ஆணை என்னவோ அதன்படி செயல்படுவேன்,” என்றார் நமீதா.