கோலாலம்பூர், ஜனவரி 14 – எதிர்க்கட்சிகளின் கூட்டணி கடந்த ஜனவரி 12இல் நடத்திய பிரம்மாண்டமான பேரணி பற்றிய தகவல்களில் ஆழ்ந்திருந்த மலேசியர்களிடையே தற்போது எப்போது பொதுத் தேர்தல் என்ற ஆர்வமும் ஆரூடங்களும் மீண்டும் தொடங்கி விட்டன.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதியோடு முடிவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, மார்ச் 27ஆம் தேதிக்கு முன்பாக பொதுத் தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் இயல்பாகவே செயலிழந்து விடும் என்பதோடு சட்ட சிக்கல்களும் உருவாகிவிடும்.
உதாரணமாக, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரிபுசாரும், ஆட்சிக் குழு உறுப்பினர்களும் இயல்பாகவே தங்களின் பதவிகளை இழந்துவிடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலை இதுவரை மலேசியாவில் நடந்ததாக சரித்திரம் இல்லை.
இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தேசிய முன்னணி அரசாங்கமும் தன்னை உட்படுத்திக் கொள்ளாது.
எனவே, மார்ச் 27ஆம் தேதிக்கு முன்னதாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாகத் தெரிகின்றது.
மார்ச் 23 சனிக்கிழமை அல்லது மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் ஒன்றில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி இறுதியில் சீனர்களின் ‘சாப் கோ மே’ எனப்படும் சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைந்ததும் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று நம்பப்படுகின்றது.