சென்னை – திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனக்கு மகனாக பிறந்தது தாம் செய்த தவ புண்ணியம் என திமுக தலைவர் கருணாநிதி புகழ்ந்துள்ளார்.
சென்னை தங்கசாலை மணிகூண்டு அருகே நேற்று மாலை நடைபெற்ற தி.மு.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: கொளத்தூரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவர் இன்று மேடைக்கு வரவில்லை.
ஊரெல்லாம் சென்று உதய சூரியனுக்கும், கை சின்னத்திற்கும் வாக்கு கேட்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதால் மு.க.ஸ்டாலின் இங்கே இல்லை, அவர் இல்லாவிட்டாலும் அவருக்கு பதிலாக நான் இங்கே இருக்கிறேன்.
ஏனென்றால் இந்த தேர்தலில் பாதி உழைப்பை, பாதி வேலைகளை தன் மீது இழுத்து போட்டுக்கொண்டு அல்லும் பகலும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்.
ஸ்டாலின் என் மகன் என்பதற்காக சொல்லவில்லை. மகனாக இல்லாவிட்டாலும் தி.மு.க.வின் சாதாரண தொண்டன் என்ற அளவில் அவர் ஆற்றும் பணி என்னையே பொறாமை கொள்ள செய்கிறது.
என் மகன் மீது எனக்கு பொறாமை வருகிறது என்றால், சிறுவயதில் நான் இந்த இயக்கத்திற்காக உழைத்ததை விட 100 மடங்கு மேலாக மு.க.ஸ்டாலின் அந்த பணியை ஆற்றி வருகிறார்.
ஏதோ வந்தோம், சென்றோம் என்று இல்லாமல் இன்றைக்கு தனியார் தொலைக்காட்சியில் கூட அவர் கொடுத்த பேட்டியை, உன்னிப்பாக கவனித்தேன். அவர் எடுத்து சொன்ன விஷயங்கள் அரசியல் பார்வையில் எப்படி அமைந்து இருக்கிறது என்பதை எண்ணிப்பார்த்தேன்.
அப்படிப்பட்ட மு.க.ஸ்டாலின் தனக்கு மகனாக பிறந்தது தாம் செய்த தவ புண்ணியம். அவர் கொளத்தூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கருணாநிதி பேசினார்.