Home Featured நாடு அரசியல் பார்வை: நஜிப்பிற்கு அடுத்த தலைவலி ஆரம்பம்! 2 இடைத் தேர்தல்களில் வென்றாக வேண்டிய கட்டாயம்!

அரசியல் பார்வை: நஜிப்பிற்கு அடுத்த தலைவலி ஆரம்பம்! 2 இடைத் தேர்தல்களில் வென்றாக வேண்டிய கட்டாயம்!

674
0
SHARE
Ad

Najib-feature-புத்ரா ஜெயா- சரவாக்கில் வெற்றிக் கனியைப் பறித்து, அதனை ருசிக்கும் முன்பே பிரதமர் நஜிப்புக்கு அடுத்த கட்ட அரசியல் தலைவலி ஆரம்பமாகிவிட்டது.

சரவாக் மாநிலத் தேர்தல் முடிவுகள் தீபகற்ப மலேசியாவைப் பாதிக்காது என்பது அனைவரின் அறிந்ததுதான். அதே சமயம், தீபகற்ப மலேசியாவில் நஜிப்பு எதிராக விசுவரூபம் எடுத்திருக்கும் எதிர்ப்பு அலைகள் சரவாக் மாநிலத்தின் கரையைக் கூடத் தொடவில்லை என்பதையும் அந்த மாநிலத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.

ஆனால், சரவாக் ஹெலிகாப்டர் விபத்தால், அடுத்து நடைபெறவிருக்கும் சுங்கை பெசார்-கோலகங்சார் இரண்டு இடைத் தேர்தல்களின்  முடிவுகளும் நஜிப்பின் தலைமைத்துவம் அம்னோவில் தொடர வேண்டுமா என்பதை நிர்ணயம் செய்யக் கூடும்.

#TamilSchoolmychoice

இந்த இரண்டு தேர்தல்களிலும் தேசிய முன்னணி தோல்வியடைந்தால், அது நேரடியாக நஜிப்பின் தலைமைத்துவத்துவத் தோல்வியாகத்தான் பார்க்கப்படும்.

காத்திருக்கும் மகாதீர்

Dr Mahathirஇதற்காகத்தான், காத்திருக்கிறார் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட். அடுத்த பொதுத் தேர்தலில் நஜிப் தலைமை தாங்கினால் தேசிய முன்னணியும், அம்னோவும் மோசமாகத் தோல்வியடையும் எனத் தொடர்ந்து கூறிவரும், மகாதீரின் கூற்றை இந்த இரண்டு இடைத் தேர்தல் தோல்விகளும் முன்னோட்டமாகக் காட்டிவிடும்.

எனவே, எப்படியாவது இந்த இடைத் தேர்தல்களில் வென்றாக வேண்டிய கட்டாயம் இதனால் நஜிப்புக்கு இருக்கிறது.

இரண்டு முக்கிய மாநிலங்களின் வாக்காளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தேர்தல்களாகவும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் 14வது பொதுத் தேர்தலின் முன்னோட்டமாகவும் இந்த இடைத் தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன. அதற்கு முக்கியக் காரணம், இனி அடுத்த இரண்டு ஆண்டுகள் சட்ட ரீதியாக நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் எதுவும் நாட்டில் நடைபெறாது என்பதுதான்! இதுதான் கடைசி இடைத் தேர்தல் காட்சி!

எதிர்க்கட்சி வசம் இருக்கும் சிலாங்கூர் மாநிலத்தின் வாக்காளர்களின் எண்ண ஓட்டத்தை, சுங்கை பெசார் இடைத் தேர்தல் பிரதிபலிக்கும் என்றால், மிகக் குறுகிய பெரும்பான்மையோடு, தேசிய முன்னணி ஆண்டு கொண்டிருக்கும் பேராக் மாநிலத்தின் வாக்காளர் மனப்போக்கை கோலகங்சார் இடைத் தேர்தல் எடுத்துக் காட்டக் கூடும்.

நஜிப்புக்கு இருக்கும் ஒரே சாதகம்

PAS Logoஇந்த இரண்டு இடைத் தேர்தல்களிலும் நஜிப்புக்கு இருக்கும் ஒரே சாதகம் இந்த இரண்டு தொகுதிகளிலும் பாஸ் கட்சி போட்டியிடலாம் என்பதுதான்!

பக்காத்தான் கூட்டணியிலிருந்து தற்போது விலகி இருக்கும் பாஸ் கட்சி தனித்து நின்றால், கண்டிப்பாகத் தோல்வியடையும். காரணம், பிகேஆர்-ஜசெக கட்சிகள் முன்பு போல இணைந்து பாஸ் கட்சியோடு ஒத்துழைப்பு தராது.

பாஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவு தருவதா அல்லது அவர்களை எதிர்த்து பக்காத்தான் ஹாராப்பான் சார்பில், பிகேஆர் அல்லது அமானா கட்சி சார்பான வேட்பாளரை நிறுத்துவதா என்ற அரசியல் சிக்கலில் தற்போது பிகேஆர்-ஜசெக கட்சிகள் சிக்கிக் கொண்டுள்ளன.

அப்படி மும்முனைப் போட்டியென்றால், தேசிய முன்னணி எளிதாக இந்த இரண்டு தொகுதிகளிலும் வென்று விடும். அத்தகைய வெற்றி, நஜிப்பின் வெற்றியாகப் பார்க்கப்படும் என்பதோடு, அம்னோவிலும், தேசிய முன்னணியிலும் அவரது நிலையை மேலும் வலுவுள்ளதாக்கிவிடும்.

அதே வேளையில் தேசிய முன்னணி இந்த இரண்டு தேர்தல்களிலும் தோல்வியடைந்தால், இரண்டு முக்கிய தொகுதிகளில் வெல்ல முடியாத நஜிப் எப்படி நாடு முழுமையிலும் வெல்ல முடியும் என்ற கேள்விகள் எழுந்து, அதன் மூலம் அம்னோவிலும் தலைமைத்துவ மாற்றங்களுக்கான அறைகூவல்கள் அதிகரிக்கும்.

எனவே, எப்படியாவது இந்த இரண்டு இடைத் தேர்தல்களிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் நஜிப் அதற்காக கடுமையாப் பாடுபடுவார் என்பது திண்ணம்!

-இரா.முத்தரசன்