கோலாலம்பூர் – மலேசியாவில் நடைபெறவிருக்கும் ‘மஹா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி’ என்ற நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளை குறித்து பேச தான் லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்து நேற்று நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது தனக்குத் தெரியாது என்றும், தான் பணம் கேட்டதாகக் கூறும் தகவலில் துளி கூட உண்மை இல்லை என்றும் சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சூர்யா மீது அக்குற்றச்சாட்டை சுமத்திய இந்துமதமாற்ற நடவடிக்கைக் குழுவின் தலைமைச் செயலாளர் அருண் துரைசாமியிடம், சூர்யா ரசிகர்கள் பலர் அது குறித்து விளக்கம் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், சூர்யாவிற்கு விரைவில் அதிகாரப்பூர்வ பதிலளிப்பேன் என்று அருண் துரைசாமி நேற்று தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எங்களுக்கு யார் மீதும் களங்கத்தை ஏற்படுத்தவோ, யாரையும் சிறுமைப்படுத்தும் எண்ணமோ இல்லை. ஆனால் இலவசமாக நடைபெறும் இளைஞர் தொண்டு நிகழ்ச்சிக்கு, 250,000 ரிங்கிட் கேட்பது, இத்தனை நாட்களாக மலேசியர்கள் தமிழ் சினிமாக்களுக்கு பங்களிப்பு செய்து வந்ததை முற்றிலும் அலட்சியப்படுத்துவது போல் உள்ளது” என்றும் அருண் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ‘தனக்கு ஒன்றும் தெரியாது’ என்று மொத்தமாக சூர்யா மறுப்பு தெரிவிப்பதற்கு முன் அவர் தனது குழுவினர், நிர்வாகிகள் மற்றும் முகவர்களிடம் இது குறித்து விசாரிக்கும் படியும் அருண் துரைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இவ்விவகாரத்தில் எந்த ஒரு வழக்கையும் சந்திக்கத் தயார் என்றும் அருண் துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.