சென்னை – அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் 1.1 சதவீதம்தான் வாக்குகள் வித்தியாசம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:- 15-ஆவது தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்து 232 தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், திமுக கூட்டணி 98 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 232 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு 1 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகள், அதாவது 39.7 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
அதிமுக கூட்டணிக்கு 1 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரத்து 60 வாக்குகள், அதாவது 40.8 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் இரு கூட்டணிகளுக்கும் உள்ள வாக்குகள் வித்தியாசம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள்தான்.
அதாவது 1.1 சதவீதம் வாக்குகள்தான். எப்படி என்றாலும் அதிமுக ஆளும்கட்சி. திமுக எதிர்க்கட்சி. எதிர்க்கட்சி என்றால், இதுவரையில் இல்லாத அளவுக்கு 98 உறுப்பினர்களைக் கொண்ட திமுகதான் பிரதான எதிர்க்கட்சி. திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.
அதுபோலவே, திருவாரூரில் இரண்டாவது முறையாக அந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் நான் (கருணாநிதி) போட்டியிட்ட நிலையில், 1,21,473 வாக்குகளை அளித்து, மிக அதிக வித்தியாசமான 68,366 வாக்குகள் கூடுதலாக அளித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும் நன்றி என்று கருணாநிதி கூறியுள்ளார்.