Home Featured நாடு “எங்களிடம் 250,000 கேட்கப்பட்டது உண்மைதான்! ஆதாரம் இருக்கின்றது -எதையும் சந்திக்கத் தயார்” – சூர்யா அறிக்கைக்கு...

“எங்களிடம் 250,000 கேட்கப்பட்டது உண்மைதான்! ஆதாரம் இருக்கின்றது -எதையும் சந்திக்கத் தயார்” – சூர்யா அறிக்கைக்கு அருண் துரைசாமி பதில்!

900
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடிகர் சூர்யா சார்பாக, அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 250,000 மலேசிய ரிங்கிட் அகரம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சையில் மகா இந்து இளைஞர் ஒற்றுமை திருவிழா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அருண் துரைசாமி (படம்) நடிகர் சூர்யாவுக்கு பதில் தந்துள்ளார்.

Arun Dorasamy-Hindu Convesion Action teamதனது பதில் அறிக்கையை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையின் முக்கிய சாராம்சங்கள் தமிழில் பின்வருமாறு:-

  • வரலாற்றில் இல்லாத அளவுக்கு 8 இந்து இயக்கங்கள் இணைந்து மகா இந்து இளைஞர் ஒற்றுமைத் திருவிழாவை நாங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றோம்.
  • சூர்யாவின் அறிக்கைக்கு பதிலளிக்க ஏன் எங்களுக்கு 2 நாட்கள் தேவைப்பட்டது என ஒரு சிலர் கேள்வி கேட்கலாம். இதற்குக் காரணம் மகா இந்து இளைஞர் திருவிழா குறித்த பிரம்மாண்டமான ஏற்பாடுகளில் நாங்கள் தீவிரமாகவும், கடுமையான வேலைப் பளுவிலும் இருக்கிறோம். இதற்காக எங்களுக்கு நிறைய முன்னேற்பாடுகளும், நிதி ஆதரவும், சவால்மிக்க பணிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளும், எங்களுக்குத் தேவைப்படுகின்றன. காரணம் இது ஒரு மாபெரும் திட்டமாகும்.

Maha Hindu Youth unity fetival-website

  • இந்த நேரத்தில் சூர்யா குறித்த சர்ச்சை தேவையில்லாத ஒன்று என்பதோடு அதனை அப்படியே தணித்துவிடத்தான் நாங்களும் விரும்புகின்றோம். காரணம் எங்களின் நிகழ்ச்சிக்கு இன்னும் 13 நாட்களே இருக்கின்றன.

“சூர்யா தரப்பினர் பிரச்சனையைப் பெரிதாக்குகின்றனர்”

  • இருந்தாலும் சூர்யா தரப்பினர் இந்தப் பிரச்சனையில் தேவைப்படுவதை விட அளவுக்கதிகமாக பதில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பதோடு, கவனக்குறைவான அறிக்கைகளை விடுத்தும், பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டும், பிரச்சனையை ஊதிப்பெரிதாக்கி, மேலும் செய்திகளை உருவாக்கி இருக்கின்றனர்.
  • ‘மகா’ இயக்கம் இதற்காக தளர்ந்து விடாது என்பதுடன் எந்தவித அச்சுறுத்தலுக்கும் பணியாது. நாங்கள் யாருக்கும் பயப்படப் போவதில்லை, கடவுளைத்தவிர!
  • “பணம் கொடுக்கும் விவகாரம்” சரியாக 3 வாரங்களுக்கு முன்னால் தலையெடுத்ததைத் தொடர்ந்து ‘மகா’ இயக்கத்தின் முதல் அதிகாரபூர்வ பத்திரிக்கை அறிக்கை இதுதான். நாங்கள் பத்திரிக்கைகளுக்கோ, சமூக வலைத் தளங்களுக்கோ தீனி போட நினைக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில், மகா வேள்வி குறித்தும், இந்து அரசு சார்பற்ற இயக்கங்கள் குறித்தும் ‘பாண்டவர்கள்’ குறித்தும் எதிர்மறையான கருத்துக்கள் எந்த உருவத்தில் எழுவதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
#TamilSchoolmychoice

surya

  • சமூக வலைத் தளங்களில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் முறையாக தகவல்களை விசாரித்துத் தெரிந்து கொள்ளாமல் பத்திரிக்கை அறிக்கை விடுத்த சூர்யாவுக்கும், அகரம் அறக்கட்டளைக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
  • ஆனால் அந்த அறிக்கை எங்களின் நிகழ்ச்சி பற்றி எதுவும் தெரியாது என்பதைச் சொல்வதற்கும், மகா இந்து இளைஞர் எழுச்சி வேள்வி 2016 நிகழ்ச்சியை மட்டம் தட்டுவதற்கும், வழக்கு தொடுப்போம் என மிரட்டுவதற்கும்தான் பயன்பட்டிருக்கின்றது.

“எங்களிடம் யாரும் விளக்கம் கேட்கவில்லை”

  • இதுபோன்ற பதில் நடவடிக்கைகள் கவனக் குறைவாக எடுக்கப்பட்டிருக்கின்றன. சூர்யா தரப்பிலிருந்து யாருமே இந்த 54 இலட்ச ரூபாய் (250,000 ரிங்கிட்) விவகாரம் குறித்து விளக்கம் கேட்கவோ, தகவல் பெறவோ முன்வரவில்லை. மலேசிய இந்து இளைஞர்களாகிய நாங்கள் விளம்பரத்திற்காகவோ, பிரபலம் பெறுவதற்காக கதைகளை உருவாக்குவதற்காகவோ இப்படிச் செய்யவில்லை. ஏன் நாங்கள் அவ்வாறு செய்யவேண்டும்?
  • ஆனால், சூர்யாவோ, தனது நற்பெயரையும் தோற்றத்தையும் தற்காத்துக்கொள்ள முனைப்பு காட்டுகிறார். தமிழகத் தேர்தலில் வாக்களிக்காத காரணத்தால் எழுந்த எதிர்மறை விமர்சனங்களைத் திசை திருப்ப அவர் இவ்வாறு நடந்து கொள்கிறாரோ என எங்களுக்கு நினைக்கத் தோன்றுகிறது.

Maha Hindu Youth Unity festival-logo

  • மகா வேள்வி 2016 நிகழ்ச்சியை குறைகூறி சூர்யா அவர்கள் கூறியிருப்பதால், மலேசிய இந்து இளைஞர்களும், மகா வேள்வி ஏற்பாட்டுக் குழுவினரும் சூர்யாவுக்கு மரியாதையோடு “எனக்கு இந்த நிகழ்ச்சி பற்றி எதுவும் தெரியாது” என அவர் கூறியுள்ள கூற்றில் உண்மையில்லை என்பதை எடுத்துக் காட்ட உறுதியுடன் உள்ளோம்.
  • இந்த செய்தியை மறுப்பதைத்தவிர சூர்யாவுக்கு வேறுவழியில்லை எனவும் நாங்கள் அறிவோம். வேறு என்ன அவரிடம் நாங்கள் எதிர்பார்க்க முடியும்? ஒப்புக் கொண்டு ஆம் என்று சொல்லவா அவரால் முடியும்? நாங்கள் இதனையே எதிர்பார்த்தோம் என்பதால் எங்களுக்கு இது குறித்து ஆச்சரியம் எதுவும் இல்லை.
  • பதில் அறிக்கை விடுப்பதற்கு முன்னால் சூர்யா அவர்கள் அவரது அகரம் குழுவினரைத் தொடர்பு கொண்டு கேட்டிருக்க வேண்டும். அவர்கள்தான் சூர்யாவை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறி அவரது நிர்வாகியின் தொடர்பு எண்ணை எங்களுக்குத் தந்தார்கள். இதன் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி முதல் நாங்கள் பல்வேறு முனைகளில் அவரது தரப்புடன் தொடர்பு கொண்டு வந்தோம்.

“மதரீதியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டேன் எனக் கூறுவதா?”

  • மதரீதியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என சூர்யா கூறியிருப்பது குறித்தும் மகா வேள்வி 2016 ஏற்பாட்டாளர்களாகிய நாங்கள் ஆச்சரியப்படுவதோடு, எங்களின் ஏமாற்றத்தையும் புலப்படுத்திக் கொள்கிறோம். ஓர் இந்து இன்னொரு இந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் எனக்கூறுவது வெட்கப்படக் கூடியது என்பதோடு அத்தகைய முடிவு அந்த மனிதரைப் பற்றியும் பல விஷயங்களை நமக்குப் புலப்படுத்துகின்றது. சூர்யாவின் இத்தகைய கூற்றுக்கு, மலேசியாவின் அரசு சார்பற்ற இந்து இயக்கங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம்.
  • இன்று சூர்யாவின் நிர்வாகி விடுத்திருக்கும் ஓர் அறிக்கையில் திங்கட்கிழமை சென்னை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப் போவதாகக் கூறியிருக்கின்றார்.
  • அப்படி நடந்தால் நாங்களும் மலேசிய நீதிமன்றத்தில் பதில் நடவடிக்கையாக அவதூறு வழக்கை பதிவு செய்வோம் என்பதுடன் சூர்யாவுக்கு எதிராகப் போலீசில் புகாரும் செய்வோம். மற்ற வழிகளில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
  • அதே வேளையில் சூர்யா தரப்பினர் நல்ல சிந்தனையுடன் இந்த சர்ச்சையை இத்துடன் முடிவுக்குக் கொண்டு வர விரும்பினால் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாங்கள் ஓர் அரசு சாரா இயக்கம் என்றாலும் நாங்கள் பலவீனமானவர்களோ, பயப்படுபவர்களோ கிடையாது.
  • மலேசியாவின் இந்து இளைஞர்களாகிய நாங்கள் தர்மத்தின் பக்கம் நிற்கின்றோம். சூர்யாவின் நண்பர்கள், அவரை அறிந்தவர்கள் தரப்பிலிருந்து எங்களுக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பலர் எங்களிடம் இந்த சர்ச்சையை அப்படியே விட்டுவிட்டு அடுத்தகட்ட வேலைகளைப் பாருங்கள் என எங்களுக்கு அறிவுரை கூறியிருக்கின்றார்கள்.

“டத்தின்ஸ்ரீ இந்திராணி ஆலோசனைக்கு நன்றி”

Indrani_samy_vellu_

டத்தின்ஸ்ரீ இந்திராணி

  • அவர்களில் டத்தின்ஸ்ரீ இந்திராணியும் (முன்னாள் மஇகா தலைவர் சாமிவேலுவின் துணைவியார்) ஒருவர். அதற்கேற்ப நாங்களும் அடுத்த கட்ட வேலைகளோடு முன்நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். காரணம், எங்களுக்கு ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், சூர்யா தரப்பினரோ எங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்போம் என பயமுறுத்துகிறார்கள், மலேசியாவின் இந்து அரசு சார்பற்ற இயக்கங்களான எங்கள் மீது அவதூறு கூறுகின்றார்கள், எங்களை சிறுமைப்படுத்துகின்றார்கள். எனவே, மகா வேள்வி ஏற்பாட்டாளர்களாகிய நாங்கள் பின்வாங்காமல் மேலும் பலமுடன் பதிலடி கொடுப்போம்.
  • எங்களுக்கு ஆதரவாக நிற்கும் – எங்கள் பின்னால் ஒற்றுமையுடன் நிற்கும் ஆயிரக்கணக்கான மலேசிய இந்து இளைஞர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இன்னும் 13 நாட்களில் நடைபெறவிருக்கும் மகா வேள்வி 2016 மலேசிய இந்து இளைஞர்களின் ஒற்றுமையை பிரம்மாண்டமான அளவில் எடுத்துக் காட்டும் வைபவமாகத் திகழும் என உறுதியாக நம்புகின்றோம்.
  • இந்தவேளையில் மலேசியாவிலோ மற்ற பகுதிகளிலோ உள்ள மற்ற அரசு சார்பற்ற இயக்கங்கள் தர்ம காரியங்களுக்கோ, சமூக நல நிகழ்ச்சிகளுக்கோ நட்சத்திரங்களை அழைத்தபோது அவர்களுக்கு இதுபோன்ற பணம் தரும் பிரச்சனைகளில் ஏற்பட்ட அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கின்றோம். இது போன்ற பிரச்சனைகளை எல்லோரும் ஒரு பாடமாகக் கொள்வோம்.
  • இந்த அறிக்கையின் வழியே எங்களிடம் இருக்கும் எல்லா ஆதாரங்களையும் பொதுமக்களின் முன்வைக்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் இப்போது இந்தப் பிரச்சனை நீதிமன்ற வழக்குகளாக மாறலாம் என்பதால், எல்லா ஆதாரங்களையும் இப்போதைக்கு வெளியிடாமல் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், தக்க நேரம் வரும்வரை காத்திருப்போம் என மகா வேள்வி 2016-இன் வழக்கறிஞர்கள் எங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.
  • எனவே, எல்லா தொலைபேசி உரையாடல் ஆதாரங்கள், தேதிகள், பெயர்கள், அனைத்துலகக் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) நகல்கள், தொலைபேசி எண்கள், தொலைநகல் பரிமாற்றங்கள், மலேசியா இந்தியா என அனுப்பப்பட்ட விரைவு அஞ்சல் (கூரியர்) ஆதாரங்கள், விமானப்பயண டிக்கெட்டுகள், வாட்ஸ்எப் பரிமாற்ற ஆதாரங்கள், இணைய அஞ்சல் பரிமாற்றங்கள் என அனைத்தையும் தொகுத்து வைத்திருக்கின்றோம்.
  • கல்வி தொடர்பான உரை நிகழ்த்தவும், நேரடியாக வருகை தரவும் சூர்யா தரப்பில் எங்களிடம் 250,000 ரிங்கிட் கேட்கப்பட்டது என்ற எங்களின் கூற்றிலும், அறக்காரியம் (charity) அல்லது வணிக ரீதியான காரணம் என்ற தனியான வித்தியாசம் பார்ப்பதில்லை என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்பதிலும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.
  • திரு சூர்யாவின் நிர்வாகி, நிகழ்ச்சி ஏற்பாட்டு பிரதிநிதிகள், மற்றும் அகரம் அறக்கட்டளை என அனைவருக்கும் எங்களின் இந்த நிகழ்ச்சி பற்றி நன்றாகவே தெரியும்.
  • அதே வேளையில், இந்த நிகழ்ச்சி தொடர்பாக இதுவரையில் எந்தவிதப் பணப் பரிமாற்றமும் நடத்தப்படவில்லை என்பதையும் நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம். இத்தகைய தொகை கேட்கப்பட்டதும் நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதோடு, நாங்கள் இதுவரை எந்தப் பணமும் தரவில்லை என்பதையும் திரு சூர்யா கூறுவதுபோல் ஒப்புக்கொள்கிறோம்.

“நாங்கள் இதற்கு மேலும் இந்தப் பிரச்சனையை வளர்க்க விரும்பவில்லை”

  • நாங்கள் இந்தப் பிரச்சனையை இதற்கு மேல் வளர்க்க விரும்பவில்லை. இனி அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது சூர்யா தரப்பினரைப் பொறுத்ததாகும்.
  • மகாவேள்வி2016 நிகழ்ச்சியின் கல்வி உரை அங்கத்தில் சிறந்த கல்வியாளரும், மிகுந்த பணிவு கொண்டவருமான டாக்டர் விக்கி என்பவரை அழைத்திருக்கின்றோம். பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இவர் இளைஞர்களும், கல்வியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவார்.

Sri-Sri-Ravi-Shankar

  • மகாவேள்வி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சுவாமி குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (படம்)  அவர்களுக்கு எங்கள் சார்பில் எந்தவித பணமும் வழங்கப்படவில்லை என்பதையும் இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
  • எங்கள் நிகழ்ச்சியில் பங்குபெறும் நமது உள்நாட்டுக் கலைஞர்களுக்கும் எந்தவித பணமும் வழங்கப்படவில்லை.
  • இந்த வேளையில் எங்களுக்கு ஆதரவும், நல்லெண்ணமும் காட்டிய குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதற்கான எல்லா செலவினங்களையும் தானே ஏற்றுக் கொண்டு எங்கள் மீது பெரும் அன்பு காட்டிய அவருக்கு எங்களின் நன்றிகள்.
  • எங்கள் மீது நல்லெண்ணம் பாராட்டிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
  • சூர்யாவின் இரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்துள்ள சர்ச்சைகளை புறக்கணித்துவிட்டு, வாருங்கள் – எங்களோடு இணைந்து ஒற்றுமையைக் கொண்டாடுவோம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். நம்மிடையே மாற்று கருத்துகள் இருக்கின்றன என்பதோடு ஒருவருக்கொருவர் மாறுபடவும் நாம் ஒப்புக் கொள்வோம்.
  • மகாவேள்வி என்பது மலேசிய இந்து இளைஞர்களின் ஒற்றுமை சுனாமி என்பதைக் காட்டுவோம். திரண்டு வருவீர்.
  • எங்களுக்கு ஆதரவு காட்டிய அனைவருக்கும் நன்றி கூறுவதோடு, எங்கள் மீது கண்டனம் தெரிவிப்பவர்கள், எங்கள் மீது சந்தேகப்படுபவர்கள், எங்களை அவமானப்படுத்துபவர்கள் என அனைவர் மீதும் நாங்கள் அன்பு செலுத்துகின்றோம்.
  • கடவுள் ஒருவருக்குத்தான் எது சிறந்தது என்பது தெரியும்!
  • எதிர்வரும் புதன்கிழமை மகா வேள்வி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தும்.
  • வாழ்க வளமுடன்!

-அருண் துரைசாமி

மேல் விவரங்களுக்கு:

www.unitehinduyouth.org.my