சென்னை – இன்று பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் , முக ஸ்டாலின், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் வேளையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை ஜெயலலிதா பதவியேற்றபோது ரஜினிகாந் அழைப்பு விடுக்கப்பட்டு கலந்து கொண்டார்.
கடந்த முறை முதல்வராக ஜெயலலிதா வெற்றி பெற்ற போது ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த கோப்புப் படம்
வரப்போகும் மற்ற சினிமாப் பிரபலங்கள் யார்?
கமலஹாசனுக்கும் ஜெயலலிதாவுக்கும் எப்போதும் ஆகாது என்பதால் – விசுவரூபம் பட வெளியீட்டின்போது இருவருக்கும் இடையில் முட்டல் மோதல் உச்சகட்டத்தை அடைந்தது என்பதால் – கமலஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் தோழிகள் என்றால் நடிகை சச்சு, பாடகி பி.சுசீலா ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் இருவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பி.சுசீலா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் ஜெயலலிதா, அவருக்கு அண்மையில் கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டபோது, “எனது தாய்க்கும் பின்னணி பாடியவர்” எனப் பாராட்டி அறிக்கை விடுத்திருந்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர், பொருளாளர் என்ற முறையில் என்ற முறையில் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
துணைத் தலைவராக இருக்கும் கருணாஸ் ஏற்கனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினராக வென்று இருப்பதால் அவரும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் வேளையில், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மக்கள் சமத்துவக் கட்சியின் தலைவருமான சரத்குமாரும் தோழமைக் கட்சித் தலைவர் என்ற முறையில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெயலலிதா மிகுந்த மரியாதை வைத்திருக்கும் மற்றொரு நடிகர் சிவகுமார். அவரும் கலந்து கொள்ளக் கூடும்.
நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல் ஆலோசகருமான சோ உடல்நலக் குறைவால் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-செல்லியல் தொகுப்பு