டெஹ்ரான் – இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக ஈரானுக்கு வருகை மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி, நேற்று ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றடைந்ததும் முதல் பணியாக, கலாச்சார பிணைப்பை வளர்க்கும் நோக்கில், அந்நகரிலுள்ள சீக்கிய ஆலயம் சென்று வழிபாடு நடத்தினார்.
டெஹ்ரான் சீக்கிய ஆலயத்தில் நரேந்திர மோடி…
டெஹ்ரான் சென்றடைந்ததும், “ஈரான் வந்து சேர்ந்துள்ளேன். இந்த நாட்டுடன் இந்தியா பல ஆண்டுகளாக மனித நாகரீக, பூர்வீகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதாரத் தொடர்பை வலுப்படுத்த முடியும் என நம்புகின்றேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
தனது ஈரானிய வருகை இருநாட்டு கலாச்சார உறவை மேம்படுத்தும் என்பதோடு, மக்களிடையிலான நல்லுறவையும் மேலும் வளர்க்கும் என தாம் நம்புவதாகவும் மோடி தெரிவித்திருக்கின்றார்.
சீக்கிய ஆலயத்தில் வழிபாடு நடத்தும் மோடி (ஆரஞ்சு வண்ண தலைப்பாகையுடன்)…
தனது வருகையின் முதல் அங்கமாக கலாச்சார உறவை வலுப்படுத்தும் வண்ணம் டெஹ்ரானிலுள்ள சீக்கிய ஆலயமான ‘பாய் கங்கா சிங் சபா குருத்துவாரா’வுக்கு வருகை தந்து அங்கு நடத்தப்பட்ட வழிபாட்டிலும் மோடி கலந்து கொண்டார்.
“இன்றைய தலைமுறையினர் நமது மாபெரும் மகான்களின் தியாகங்களையும், குரு கிராந்த் சாஹிப் (சீக்கியர்களின் புனித நூல்) குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றும் மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியர்களாகிய நமக்கு ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. நாம் அனைவரையும் ஏற்றுக் கொள்வோம். அனைவரோடும் இரண்டறக் கலந்து விடுவோம்” என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
டெஹ்ரான் சீக்கிய ஆலயத்தில் நடத்திய வழிபாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவுடன் தனது பழைய பகைமையை புறந்தள்ளி விட்டு, தற்போது நட்பு பாராட்டும் சூழலுக்கு ஈரான் மாறியுள்ள காரணத்தால், அந்நாட்டுடனான வர்த்தக வாய்ப்புகள் தற்போது பெருகியுள்ளன. இது இந்தியாவுக்கும் சாதகமாக அமையும் என்றும், அந்த சாதகங்களை மோடியின் ஈரானிய வருகை மேலும் விரிவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.