படம் முழுக்க தங்களின் ஆக்கிரமிப்பை செய்திருப்பவர்கள் சந்தானமும் பவர் ஸ்டார் சீனிவாசனும். பவர் ஸ்டாரின் அலம்பல்களை பத்திரிக்கைகளின் வழி மட்டும் இதுவரை தெரிந்திருந்த சினிமா ரசிகர்கள் திரையில் என்னதான் செய்யப் போகின்றார் என்பதைக் காண படையெடுத்து வருவார்கள் என்பது திண்ணம்.
பவர் ஸ்டாரும் யாருக்கும் ஏமாற்றம் வைக்காமல், சிறப்பாகவே நடித்து தன்னை இந்தப் படத்தின் மூலம் நிலைநாட்டிக் கொண்டுள்ளார். படம் முழுக்க ஒரே சிரிப்பு மழைதான்.
இந்தப் படத்திற்குப் பின்னர் பவர் ஸ்டார் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என உறுதியாக நம்பலாம்.
ஆனாலும் வெறும் நகைச்சுவை தோரணங்களோடு படத்தை நகர்த்தாமல், கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்தின் சிறப்பம்சம். கதையும் நமக்கு புதிதல்ல.
பல்லாண்டுகளுக்கு முன்னால் பாக்கியராஜ் கதை, வசனம் எழுதி இயக்கி நடித்திருந்த ‘இன்று போய் நாளை வா’ படத்தின் அதே கதைதான் இது. ஆனாலும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப கதையை திறம்பட மாற்றியுள்ளதோடு, சில கதாபாத்திரங்களையும் மாற்றியுள்ளது படத்தின் ஓட்டத்திற்கும், ரசிப்பதற்கும் உதவியுள்ளது.
பாக்கியராஜ் படத்தில் இந்தி வகுப்பு எடுக்கும் காட்சிகள் அந்த காலத்தில் பிரபலம். இந்தி வகுப்பு ஆசிரியரை சங்கீத வித்வானாகவும், குத்துச் சண்டை கற்றுக் கொடுப்பவரை நடன ஆசிரியராகவும் மாற்றி அவர்களைச் சுற்றியும் திரைக்கதையை மாற்றியுள்ளது படத்தின் நகைச்சுவை அம்சங்களை கூட்டியுள்ளது.
திரைக்கதையோடு, படத்தின் மற்ற தயாரிப்பு அம்சங்களிலும் கவனம் செலுத்தியிருப்பதால் படம் பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றது. திறமையான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெத்தின் கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.
படத்தின் நாயகி விசாகா அம்சமான புதுவரவு. அழகான புன்னகையோடு, படம் முழுக்க வலம் வருகின்றார். ஒரு பாடலில் கவர்ச்சியும் காட்டியிருக்கின்றார். படத்தின் வெற்றிக்கு அவரது நடிப்பும் தோற்றமும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
ஒரு சில காட்சிகளில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குநராகவும், சிம்பு நடிகராகவும் தோன்றுகின்றனர். ஆனால் அவர்களின் காட்சி வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போலில்லாமல், கதையின் ஓட்டத்தோடு இணைக்கப்பட்டிருப்பது இயக்குநரின் திறனுக்கு சான்று.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பொங்கல் திருநாளில் ரசிகர்கள் பயப்படாமல் சினிமா அரங்குக்கு சென்று இரண்டரை மணி நேரம் சிரித்து மகிழ்ந்துவிட்டு வெளியே வரும் வண்ணம் தயாரிக்கப்பட்டிருக்கும் படம். பார்த்து சிரித்து மகிழுங்கள்.
-சினிமா முரசன்