Home Slider இலங்கையில் முதல் பெண் தலைமை நீதிபதி நீக்கம்

இலங்கையில் முதல் பெண் தலைமை நீதிபதி நீக்கம்

1234
0
SHARE
Ad

Shirani-Bandaranayakeகொழும்பு, ஜனவரி 14 – இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேறியதையடுத்து தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்து அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் முதல் பெண் தலைமை நீதிபதியாக 54 வயதான ஷிராணி பண்டாரநாயகே (படம்) கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். வருவாயை விட அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் மீது அரசு குற்றம்சாட்டி, அதை விசாரிக்க நாடாளுமன்ற தேர்வுக் குழுவையும் அமைத்தது.

இது தொடர்பான வழக்கில் அரசின் இந்த நடவடிக்கை சட்டத்துக்குப் புறம்பானது என்று இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக வக்கீல்களும், மனித உரிமை ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை நடத்தின. உலக நாடுகளும், ஐ.நா. சபையும் இலங்கை அரசின் செயலை வன்மையாக கண்டித்தன.

#TamilSchoolmychoice

இருப்பினும் நாடாளுமன்ற தேர்வுக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் 3  உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதி மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. இதனால் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கண்டன தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுத்த அதிபர் ராஜபக்சே, தலைமை நீதிபதி ஷிராணியை பதவி நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார். ”இந்த உத்தரவு தலைமை நீதிபதியின் வீட்டில் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது” என்று அதிபரின் உதவியாளர் விஜயானந்த ஹெரத் கூறினார். அதிபரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.