சமரிண்டா (இந்தோனிசியா) – டிபி சார்லஸ் படகைச் சேர்ந்த 7 இந்தோனிசியப் பணியார்களை பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
“கடத்தல் நடத்திருப்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்காக நாங்கள் காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்” என்று சமாரிண்டா துறைமுக தலைவர் கோல் யூஸ் குஸ்மானி இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
“கடத்தப்பட்ட பணியாளர்களில் ஒருவரான சியாரில் மூலமாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இன்று வியாழக்கிழமை காலை 10.20 மணி முதல் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகின்றோம். மங்காலியாட் கேப் அருகே அந்தப் படகு இருக்கின்றது” என்று குஸ்மானி தெரிவித்துள்ளார்.
அந்தப் படகில் இருந்தவர்களில் 7 பேர் கடத்தப்பட்டு, மீதம் 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை மதியம் அப்படகு சமாரிண்டாவை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய நிலவரப்படி, அபு சயாப் இயக்கத்தினர் தான் மீண்டும் இந்த கடத்தல் வேலையைச் செய்துள்ளனர் என்று நம்பப்படுகின்றது.