Home Featured நாடு ‘மைவாட்ச்’ சஞ்சீவன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்!

‘மைவாட்ச்’ சஞ்சீவன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்!

827
0
SHARE
Ad

Sanjeevanகோலாலம்பூர் – சட்டவிரோதமாக சூதாட்ட மையம் நடத்தி வந்தவரிடமிருந்து மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறி நேற்று கைது செய்யப்பட்ட ‘மைவாட்ச்’ குற்றச்செயல் தடுப்பு இயக்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீ சஞ்சீவன், மற்றும் அவரது ஓட்டுநரை நாளை வெள்ளிக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக் காவல் உத்தரவு நிறைவடைந்தவுடன் அவர் விடுவிக்கப்படுவார் எனத் தான் எதிர்பார்ப்பதாக சஞ்சீவனின் வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தடுப்புக்காவலுக்கான கால அவகாசம் குறைவாக இருப்பதாகவும், விசாரணைக்கு இன்னும் அதிக காலம் அவகாசம் தேவை என்றும் காவல்துறை கோரிக்கை விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை மதியம் 2 மணியளவில், 38 வயதான அந்த சூதாட்ட மைய நிர்வாகியைத் தொடர்பு கொண்ட சஞ்சீவன் (வயது 31), சட்டவிரோதமாக நடைபெறும் சூதாட்ட மையத்தின் செயல்பாடுகள் குறித்து வெளியே சொல்லக் கூடாது என்றால் தனக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், இந்த மிரட்டலால் அச்சமடைந்த அந்த சூதாட்ட மைய நிர்வாகி, தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதேநேரத்தில், சஞ்சீவனைச் சந்திக்கவும், பணம் கொடுக்கவும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

அதன் பிறகு 8 மணி நேரத்திற்குப் பின்னர், நிலாய் சுங்கச் சாவடி அருகே சஞ்சீவனைச் சந்தித்த அந்த நிர்வாகி, அவரிடம் 25,000 ரிங்கிட் ரொக்கப்பணத்தைக் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த புக்கிட் அம்மான் குற்றப்புலனாய்வுத் துறை பிரிவு டி7, சஞ்சீவனையும், அவரது 26 வயதான ஓட்டுநரையும் கைது செய்துள்ளது. இந்தியப் பிரஜையான அந்த ஓட்டுநரின் வேலை அனுமதி ஆவணங்கள் காலாவதியாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், சஞ்சீவனின் வாகனத்தைச் சோதனையிட்ட காவல்துறை, அதில் இருந்து 16,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தையும், 5 செல்பேசிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

படம்: நன்றி (The Star)