இலண்டன் – பிரிட்டன் முழுவதும் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொது வாக்கெடுப்பு பெருமளவில் பாதிப்படைந்தது.
பல வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்டு, அதற்குப் பதிலாக மாற்று வாக்களிப்பு மையங்கள் வாக்காளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் வெள்ளத்தின் காரணமாக மூடப்பட்ட வாக்களிப்பு மையம்…
வரலாற்றில் இல்லாத அளவுக்கு கருத்து விவாதங்களால் இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிப்பதா, அல்லது வெளியேறுவதா என்பதை நிர்ணயிக்க இன்று பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
இன்று நடைபெறும் வாக்கெடுப்பு இரவு 10.00 மணிக்கு நிறைவடைகின்றது.
அதன் பின்னர் ஆங்காங்கு உள்ள வட்டார வாக்கு எண்ணிக்கை மையங்களில் அங்கேயே வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். அதன் பின்னர் மான்செஸ்டர் நகரிலுள்ள வாக்கு எண்ணிக்கை தலைமையகத்தில் வாக்குகள் சரி பார்க்கப்படும்.
முழுமையான முடிவுகள், பிரிட்டன் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை (மலேசிய நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.