புதுடில்லி – செல்பி எனப்படும் தம்படம் எடுக்கும் மோகம் பலரை எப்படியெல்லாம் அலைக்கழிக்கின்றது என்பதற்கு மற்றொரு உதாரணமாக, நேற்று செல்பி எடுக்கப்போன ஒருவரோடு, மேலும் ஆறு பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
கங்கை நதியின் தோற்றம் (கோப்புப் படம்)
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை அடுத்த கரனல்கஞ்ச பகுதியில் ஏழு வாலிபர்கள் கங்கை ஆற்றில் குளிக்கச் சென்றிருக்கின்றனர். இவர்களில் சிவம் என்ற இளைஞர் ஆற்றின் கரையோரம் நின்று செல்பி எடுக்க முயற்சி செய்திருக்கின்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்து மூழ்கினார்.
இதைத் தொடர்ந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது நண்பர் மக்சூத் என்பவர், அவரைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் அவரும் நீரில் மூழ்கியதால், தொடர்ந்து அவரது நண்பர்கள் ஐந்து பேரும் ஆற்றில் குதித்தனர்.
செல்பி எடுக்க முனைந்த சிவம் என்பவரோடு, அவரைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த ஆறு பேரும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர், நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மரணமடைந்த ஏழு பேர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.