கோலாலம்பூர் – துருக்கியத் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அதாதுர்க் விமான நிலையத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
“இஸ்தான்புல் அதாதுர்க் விமான நிலையத்தில் நடந்த தீவிரவாத் தாக்குதலை அறிந்து அதிர்ச்சியடைகின்றேன். துருக்கி மக்களுக்கும், குறிப்பாக அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த அர்த்தமற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கொடுமையான செயலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது” என்று நஜிப் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரையில், இந்தச் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தனக்குத் தகவல் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ள நஜிப், எனினும், மலேசிய வெளியுறவு அமைச்சு தொடர்ந்து அது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.