Home Featured நாடு மலேசிய இந்துதர்ம மாமன்ற 34-வது தேசியப் பேராளர் மாநாடு – சிறப்புச் செய்தி!

மலேசிய இந்துதர்ம மாமன்ற 34-வது தேசியப் பேராளர் மாநாடு – சிறப்புச் செய்தி!

1067
0
SHARE
Ad

MHDM2

கோலாலம்பூர் – மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 34-வது ஆண்டு தேசியப் பேராளர் மாநாடு கடந்த 25, 26 ஜூன் 2016-அன்று போர்ட்டிக்சன் நியூப் பயிற்சி மையத்தில் சிறப்பாக நடந்தேறியது. இந்த இரண்டு நாள் மாநாட்டின் முதல் அங்கத்தில் சிவஸ்ரீ இராமலிங்க குருக்களின் பூர்வாங்க பூஜையும், மான்றத்தின் தேசிய உபக்குழுக்கள், கோட்ட மற்றும் அருள்நிலையங்களின் அறிக்கைகள்  ஒளியொலி படைப்பாக தங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் திட்டங்களையும் சமர்ப்பித்தனர்.

அன்று இரவு மணி 8.30க்கு விருதளிப்பு விழா நடைபெற்றது. மாமன்றத்திற்கும், இந்து தர்மத்திற்கும், சமூகத்திற்கும் ஆற்றிய தன்னலமற்ற திருத்தொண்டினை அங்கீகரித்து ஐவருக்குத் ‘தர்ம மாமணி’ மற்றும் ‘தர்ம பூஷனி’ ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்தது.

#TamilSchoolmychoice

அவ்வகையில், முருகேசு கண்ணன், சரண் பரமசிவம், மனோகரன் முனியாண்டி ஆகிய மூவருக்கும் தர்ம மாமணி விருதும், எஸ்.கனகாம்பாள், செல்வம் மாணிக்கம் ஆகிய இருவருக்கும் தர்ம பூஷனி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மாமன்ற தோற்றுனர்கள் எழுவரில் ஒருவரான ஒய்வுப்பெற்ற லெப்டனன் கர்னல் இராஜு அருணாசலத்திற்கு மாமன்றத்தின் உயரிய விருதான ‘தர்ம பூஷனம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

MHDM1மேலும், பொது மக்களில் ஒருவர் தியாக உணர்வோடு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட உரிமையை நிலைநிறுத்தி இந்து சமயத்தைப் பேணிக்காத்த சமூக சேவையாளர் இந்திரா காந்திக்கு, 2016ஆம் ஆண்டிற்கான மாமன்ற தேசிய விருதினை வழங்கி பாராட்டி கௌரவித்தது.

மேலும் யூ.பி.எஸ்.ஆர், பிடி3, எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம், மெட்ரிகுலேஷன் ஆகிய தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியைப் பெற்ற மாமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்குச் சான்றிதழும் ஊக்குவிப்புத் தொகையும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

இதனிடையே, இம்மாநாட்டில் பேரவைத் தீர்மானங்களும், அரசாங்கத்திற்கு மாமன்றம் சார்பில் அளிக்கப்படவுள்ள கோரிக்கைகள் குறித்தும் அறிவிக்கப்பட்டன.

34வது ஆண்டு தேசியப் பேராளர் மாநாடு ஏகமனதாக ஏற்றுக்கொண்டு மாமன்றத் தேசியத்தலைவர் முன்வைத்த தீர்மானங்களாவன:

MHDM1.மாமன்ற உறுப்பினர்கள் யாவரும் நம் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தை மதித்து பேணிக்காத்து பேரரசர்க்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசமாக இருப்போம் என உறுதியளிக்கிறோம்.

2.மலேசிய கல்வி தத்துவ நான்கு கூறுகளுக்கேற்ப (Jasmani; Emosi; Rohani & Intelek) ஒவ்வொரு மாணவருக்கும் ஆன்மீகம் (Rohani) கற்பித்தல் அவசியமாகும். அந்த அடிப்படையில் எவ்வாறு முஸ்லீம் மாணவர்களுக்கு இஸ்லாமியப் பாடம் பள்ளி நேரங்களிலே ஒரு பாடமாகக் கற்பிற்கப்படுகிறதோ அது போன்று, இந்து சமய பாடமும் இந்து மாணவர்களுக்கு நாடளவில் பள்ளி நேரத்திலேயே ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று மலேசிய இந்துதர்ம மாமன்றம், மீண்டும் ஒரு முறை மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்கின்றது. இவ்வழி, நாட்டின் சிறந்த குடிமக்களையும் பண்புள்ள சமுதாயத்தையும் நாட்டின் ஒற்றுமையைப் பேணும் இந்துக்களை உருவாக்க முடியும் என மாமன்றம் நம்புகிறது.

3.மலேசிய அரசு அமைச்சரவையில் இந்து சமயத்தினருக்கும் ஒரு தனித்துறை அமைத்து இந்துக்களின் நலன்களை காத்திடவும் தேவைகளை பூர்த்தி செய்திடவும் அரசு ஆவன செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை மீண்டும் இவ்வாண்டு பிரதமருக்கும் அரசுக்கும் முன் வைக்கின்றது. இத்துறையின்வழி அனைத்து இந்து சமய ஆலயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என மாமன்றம் நம்புகின்றது.

4.இந்துக்கள் மதமாற்றத்தால் குறிப்பாக இஸ்லாம் மதத்திற்கு மாறியப்போது அல்லது மாற்றப்படும் போது இந்துக்கள் எதிர்நோக்கும் நெடுங்கால அவலங்களிலிருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடவும் தொடர்ந்து அரசுக்கு இந்துக்களின் ஆதரவு தொடர்ந்திடவும் அரசியலமைப்பு சட்ட திட்டத்தில் மாற்றங்களை உடன் கொண்டு வேண்டும் எனும் கோரிக்கையை பிரதமருக்கும் அரசுக்கும் மலேசிய இந்து தர்ம மாமன்றம் முன் வைக்கின்றது.

5.இந்து மதம் மட்டுமல்லாமல், இந்நாட்டில் உள்ள அனைத்து இன, மதத்தைச் சார்ந்த சமயம், மொழி, கலை, கலாச்சாரம் தொடர்பான விசயங்களைக் குறித்து இழிவுப்படுத்தி, அவமதித்து மலேசிய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கும் செயலை மேற்கொள்ளும் எந்த இன, மதத்தைச் சார்ந்த நபர்களின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி மாமன்றம் கேட்டுக் கொள்கிறது. நீதிமன்றம் அவர்களுக்குத் தண்டனையாக துப்புரவு பணி, முதியோர் இல்லத்தில் சேவை முதலான மனம் வருந்தி திருந்தும் தண்டனையாக வழங்குதல் வேண்டுமென மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.

அரசாங்கத்திற்கு மாமன்றத்தின் முறையீடுகள்

mhdm31.இவ்வாண்டு மீண்டும் மாதாந்திர அடிப்படையில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கோவில்களில் பூஜை மேற்கொண்டு சமய வகுப்புகளும் நடத்தி வரும் மலேசிய அர்ச்சகர்களுக்கு/குருமார்களுக்கு மாதந்தோறும் சன்மானம் வழங்குதலை அரசுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

2.இந்து சமய வகுப்புகள் நடத்தும் போதனையாசிரியர்களுக்கு மாதந்தோறும் சன்மானம் (அரசாங்கம் சார்பற்ற அமைப்புகளால் நியமனம் செய்யப்பட்டவர்கள்) வழங்க அரசுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

3.கோவில்களிலும் இந்து இயக்கங்களிலும் பணிபுரிந்து வரும் அனைத்து துணைத் திருமணப் பதிவதிகாரிகளுக்கும் மாதந்தோறும் சன்மானம் அரசு வழங்க வேண்டி பரிந்துரைக்கப்படுகிறது.

4.இந்து கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வழிபடும் வசதிகளை கொண்டிருத்தலை வலியுறுத்தி வேண்டி ஆலய நிர்வாகங்களையும் ஆலயக் கட்டுமானங்களை ஏற்று கட்டிட தகுதிச் சான்று (CF) வழங்கும் மாநகராட்சி மன்றங்களையும் / நகராண்மை கழகங்ளையும் அமலாக்கம் செய்ய வேண்டிக் மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.

5.மலிவான மதுபானங்களைப் பரவலாக விற்பதையும், விற்பதற்கான அனுமதியினை வழங்குதலையும் பொது இடங்களில் மதுபானம் அருந்தும் செயலையும் மாமன்றம் கண்டித்துத் தக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி செயலவை உறுப்பினர்களையும் அதன் தொடர்புடைய அதிகாரிகளையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

6.குண்டர்கும்பல், போதைப்பொருள் பழக்கங்களைப் பள்ளிகளிலும் உயர்கல்விக் கூடங்களிலும் பரப்பும் செயலைக் கண்டித்து அரசு மேலான நடவடிக்கைகளை எடுத்திடல் வேண்டும் என மாமன்றம் கேட்டுக்க் கொள்கிறது.

மலேசிய இந்துக்களிடம் வேண்டுகோள்

mhdm41.நாடுதழுவிய அளவில் 523 தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்துமத அடிப்படை சமயக் கல்வியைக் கற்பிக்கும் வகையில் இலவச இந்துதர்ம பாடப் புத்தகங்களும் நடவடிக்கை புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்துசமயக் கல்வித் திட்டத்தின் மூலம் நன்னெறிகளை மேம்படுத்துதல் வேண்டும். கூட்டு முயற்சியாக இச்சமயக் கல்வித் திட்டம் அமைவதற்குப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியக்குழு ஆகியோர் இணைந்து செயல்பட பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

2.நமது மாமன்றம் நடத்தும் தேசிய அளவிலான இந்துதர்ம அடிப்படை பயிற்சி வகுப்பில் பொதுமக்கள், முக்கியமாகப் பெற்றோர்கள் அவர்தம் குழந்தைகளை இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஊக்குவித்து ஆதரவு நல்குதல் வேண்டும் என மாமன்றம் விரும்புகின்றது.

3.மாமன்றம் நடத்தும் இந்துதர்ம இளைஞர் பயிற்சி முகாமில் நம் இந்து இளைஞர்கள் பங்குபெற்று பயனடையும் வகையிலும் இளைஞர்களிடையே நிலவும் சமூக சீர்கேடுகளை ஒழித்திடவும், இளைஞர்களிடையே நற்குணங்களை மேம்படுத்துவதற்கும் பொது மக்கள், சமூக நலன் விரும்பிகள், இந்து இயக்கங்கள் இம்முகாமிற்கு இளைஞர்கள் பங்குபெற ஊக்குவித்தலை மாமன்றம் வரவேற்கிறது.

பினாங்கு அருள்நிலையம் அனுப்பிய பரிந்துரை

திருமணம் புரிந்துகொள்ளவிருக்கும் இந்து தம்பதியினர் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்வதற்கு முன்னர் கட்டாயமாக இந்து சமய திருமணப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளுதல் வேண்டுமென பினாங்கு அருள்நிலையம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு இந்துக்களிடையிலான மணமுறிவுகளை தவிர்க்கலாம்.

இவ்வாறான தீர்மானங்கள் இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டன.

மேலும், மாமன்றத்தில் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்த தாமான் துன் சம்பந்தன் (2015) மற்றும் பினாங்கு (2016) அருள்நிலையங்களுக்கு ஞானாசிரியர் விருது வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 3.30க்குச் சம்பூர்த்திப் பூஜையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றதாக கௌரவப் பொதுச் செயலாளர் ரிஷிகுமார் வடிவேலு தெரிவித்தார்.