Home One Line P1 மலாய் தன்மான காங்கிரஸ் தீர்மானங்களுக்கு இந்து தர்ம மாமன்றம் கண்டனம்

மலாய் தன்மான காங்கிரஸ் தீர்மானங்களுக்கு இந்து தர்ம மாமன்றம் கண்டனம்

1150
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மையில் நடத்தப்பட்ட மலாய் தன்மானக் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது கண்டனம் தெரிவித்து மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் சார்பில் அதன் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை (படம்) வெளியிட்டிருக்கும் அறிக்கை பின்வருமாறு:

“கடந்த காலங்களைக் காட்டிலும் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சமீப காலமாக நாட்டில் இனத்துவேசம் மற்றும் மொழித் துவேசம் பற்றிய வெளிப்படையான பேச்சுகள் ஆட்சியிலிருப்பவர்களிடமிருந்தே அதிகரித்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. பல்லின மக்கள் வாழும் நமது மலேசிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நமது தாய் திருநாடான மலேசியாவின் சுதந்திரத்துக்காகவும் வளர்ச்சிக்காகவும் எல்லா இனத்தவர்களும் அரும்பாடுபட்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது. அதுவே வரலாறும் கூட. அவர்கள் செய்த தியாகத்திற்கு என்றும் மதிப்பளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் ஒரே இனத்தையும் மதத்தையும் குறிப்பிட்டு அரசியல் நடத்தும் சில நயவஞ்சகர்களின் சூழ்ச்சியில் நாம் மீண்டும் அகப்பட்டு விடக்கூடாது.

#TamilSchoolmychoice

நேற்றைய முன் தினம் நடைபெற்ற 5,000 பேர் கூடிய மலாய்காரர்களின் தன்மானம் காக்கும் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் மலேசிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் இதற்கு பொது மக்கள் அதிகாரபூர்வமாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் வலியுறுத்துகிறது.

முதலாவது தீர்மானமானது நாட்டின் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் இருப்பதால், அவற்றை 2026-க்குள் முற்றாக அகற்ற வேண்டும் என்பது மிகவும் கண்டனத்துக்குரியது. உயிருக்கும் மேலான ஒரு இனத்தின் தாய்மொழியை புறக்கணிக்க எடுத்திருக்கும் முடிவு, அவர்களின் உணர்வுகளை சீண்டிவிட்டு மக்களிடையே நிலவும் ஒற்றுமையை சீர்குலைக்க எடுத்த முடிவாகும்.

இரண்டாவது தீர்மானமானது, அரசாங்கத்தின் எல்லா முக்கிய பதவிகளுக்கும் மலாய்காரர்களையே நியமிக்க வேண்டும் என்பது மூவின மக்கள், சபா சரவாக் பூர்வீகக்குடி மக்கள் உன்னதமாக வாழும் நாட்டில் இது உத்தமமான முடிவு ஆகாது. இதை கருத்தில் கொண்டு தான் கடந்த தேர்தல் உறுதிமொழியில் தகுதியையும் திறமையும் அடிப்படையில் மக்கள் தொகை விகிதாசாரப்படி அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அரசாங்கத்தின் முக்கிய பதவிகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்களுக்கே வழங்குவது என்பது தகுதியானவர்களை புறம் தள்ளி தரமான மக்கள் சேவைக்கு பூட்டு போடுவது போன்று ஆகிவிடும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகி விடும் என்பதை உணர வேண்டும்.

மூன்றாவது தீர்மானமானது, இஸ்லாமிய விவகாரங்களில் தலையிட சுஹாகாம், மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் மற்றும் அரசு சார்பற்ற சுதந்திர அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனும் முடிவு நாட்டின் கூட்டரசு அரசியமைப்பு சட்டத்திற்கு புறம்பாகவும் அரசு சார்பற்ற அமைப்புகளின் சுதந்திரக்கு குந்தகத்தை விளைவிக்கும் என்பதனால் மலேசிய இந்து தர்ம மாமன்றம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

அதே வேளையில், மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் துன் மகாதீர், மலாய்காரர்களை முன்வைத்து மக்கள் பிரதமர் என்பதை மறந்து, தனது உரையை நிகழ்த்தி இருந்தாலும் கூட, மற்ற சமுதாயங்களைக் குறைத்துப் பேசியிருப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. வந்தவர்கள் இங்கேயே தங்கி விட்டார்கள் என்ற கூற்று, நாட்டின் வளர்ச்சிக்கு உயிரை உதிர்த்ததோடு இரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி பாடுபட்ட மற்ற சமுதாயத்தினரை இழிவுப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இன்று உலகமே கண்டு வியக்கும் மலேசியாவின் வளர்ச்சிக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும் தங்களையே அர்பணித்தவர்கள் மலாய்காரர்கள் உட்பட தமிழ், சீன சமுதாயத்தினரும் தான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

கடந்தாண்டு பொதுத் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் யாவரும் தனிப்பட்ட இனத்தை மட்டும் பிரதிநிதிக்கவில்லை என்பதனை பல இடங்களில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் கூறியதை நாம் அனைவரும் அறிவோம். அப்படி இருக்கையில் அவர் மட்டும் ஒரு சாராரை உயர்த்தியும் மற்றவர்களை தாழ்த்தியும் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அறியாமையை அறிவினாலும், பொய்மையை வாய்மையினாலும், பழிதீர்க்கும் எண்ணத்தை கருணையினாலும், இம்சையை அகிம்சையினாலும் வெற்றிகொள்ளக் கூடிய மனிதத்தை மதிக்கும் சனாதன தர்மத்தில் பிறந்தவர்கள் நாம். நம்மை மையப்படுத்தி வரும் இன்னல்களையும் இடர்களையும் களைந்திட மலேசிய வாழ் அனைத்து இந்துக்களும் ஒன்றிணைய இதுவே நல்ல தருணம். தீய அசுர சக்திகள் நம் ஒற்றுமைக்கு பிளைவு ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றன. நாம் ஒரு குரலாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது. நாம் இதுகாறும் பொறுமையாக இருந்து தியாகங்கள் பல செய்தது அனைத்தும் நம் தவமாக ஆகட்டும். அந்த தவத்திற்கு பலனாக இன்றைய தினம் வெற்றி திருநாளில் அம்பாள் மகிஷாசுரமர்த்தினி அருள்பாலித்து இனிவரும் காலத்தை நமக்கு பொற்காலமாக ஆக்கிக் காத்தருள வேண்டுகிறோம்.”