Home One Line P1 “மதுபான விற்பனை தடை ” – இந்து தர்ம மாமன்றம் வரவேற்பு

“மதுபான விற்பனை தடை ” – இந்து தர்ம மாமன்றம் வரவேற்பு

1149
0
SHARE
Ad
இராதாகிருஷ்ணன் அழகுமலை

கோலாலம்பூர் : அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கோலாலம்பூரில் மளிகைக் கடைகள், சில்லறைக் கடைகள், சீன மருந்து கடைகள் ஆகியவற்றில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட உள்ளதாகக் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசாவின் அறிவிப்பை மலேசிய இந்துதர்ம மாமன்றம் பெரிதும் வரவேற்றுள்ளது.

“இந்து சமயத்தில் மது அருந்துதல், பஞ்சமாபாதகம் என்ற ஐம் பெரும் கொடுஞ்செயல்களில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. மது அருந்துவதால் மதி மயங்கி, தன் சுயநினைவை இழந்து பல்வேறு தவறுகள் செய்ய தூண்டுகின்றது. பல குற்றச் செயல்களில் ஈடுபடவும் வழிவகுக்கின்றது. குடும்பங்கள் சீரழிக்கப்படுகின்றன. ஆதலால்தான் மது அருந்துதல் கூடாது என்பதை இந்து சமயம் கடுமையாக வலியுறுத்துக்கிறது. இருப்பினும், சமய கட்டொழுங்கு இன்மையினால் மது என்னும் அரக்கனால் இந்திய சமூகம் பன்னெடுங்காலமாக தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, மலிவுவிலை மதுபானம் அல்லது சம்சுவால் இந்திய சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச அமைச்சின் மேற்குறிப்பிட்ட முடிவால் இந்திய சமூகத்தினரிடையே உள்ள மதுபானம் அல்லது சம்சு அருந்தும் பழக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்” என மலேசிய இந்து தர்ம மாமன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்தது.

“உலக வரைப்படத்தில் மலேசியா சிறிய நாடாக இருந்தாலும் மது பயன்பாட்டில் 10-ஆவது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது. அதிலும், ஏழ்மையில் உள்ளோரும் தோட்டப்புறங்களில் மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்போரும் சம்சுவுக்குப் பெரிதும் அடிமையாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது அவர்களில் பலர் அங்குள்ள பலசரக்கு கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை மாதம் முழுவதும் கணக்கு எழுதிக் கொண்டு வாங்கியவற்றுக்கு சம்பளம் கிடைத்தவுடன் ஒரு பகுதியை மட்டும் செலுத்தி வருவதும் உண்டு. அதனால் தொடரும் கடன் கணக்கில் அடங்கா. அதில், சாராயம் வாங்கிய கணக்கும் அடங்கும். மலேசியாவில் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டைகளாக உள்ளவைகளில் குடிப்பழக்கம் முதன்மையானது.
நமது சமூகத்தின் வரலாற்றுப் பக்கங்கள் நன்கு அறியும். காலத்திற்கு ஏற்ப இந்திய சமூகம் தன்னுடைய வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வரும் வேளையில், மது அல்லது சம்சுக்கு அடிமையாகும் அவலமும் தொடர்ந்து பதிவாகிக் கொண்டுதான் வருகிறது” என இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“38% ஆல்கஹால் அடங்கிய சம்சு எனப்படும் மலிவு மதுபானம் வெறும் 1.50 வெள்ளியில் பல பலசரக்கு குடும்பக் கடைகளில் விற்கப்படுகின்றது. மலேசியாவில் ஓர் ஆண்டுக்கு மட்டும் 18 இலட்சம் வெள்ளியில் சம்சு மலிவுவிலை மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மலிவு விலையில் கிடைப்பதாலேயே இதற்குப் பலரும் எளிதில் அடிமையாகி விடுகின்றனர். இந்த நாட்டில் மதுபானம் அருந்துபவர்களில் 8 விழுக்காடு இந்திய சமூகத்தினர் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய இளைஞர்களும் அதிலும் பதின்ம வயதினரும் இந்த மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே, மதுபானம் குறித்து கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின் முடிவை மாமன்றம் பெரிதும் வரவேற்கின்றது” என இராதாகிருஷ்ணன் அழகுமலை மேலும் தெரிவித்தார்.

இத்தகைய முடிவு கோலாலம்பூரில் மட்டுமல்லாது நாட்டின் பிற மாநிலங்களிலும் அவசியம் ஏக காலத்தில் அமலாக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர் “இந்த முயற்சி நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டாலொழிய, இதன் பயனை நாம் முழுமையாகக் கண்டறிய இயலாது. ஏனென்றால், வருங்காலத்தில் மலிவுவிலை மதுபானம் கடத்தல் சம்பவங்கள் அதிகம் நிகழக் கூடிய சூழ்நிலையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மலிவுவிலை மதுபான விற்பனையைத் தடை செய்ய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என மாமன்றம் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் மாநாட்டில் தீர்மானத்தை எடுத்து வருவதோடு அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது” என்றார்.

“குறிப்பாக, ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியின்போது ‘வள்ளுவப் பேராசான் வலியுறுத்திய வழியில் மதுவும் மாமிசமும் இன்றி தீபாவளியைக் கொண்டாடுவோம்’ என்னும் விழிப்புணர்வைத் தொடர்ந்து மாமன்றம் மேற்கொண்டு வருகிறது. மது அருந்தும் பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்ட சமூகமாக நம் சமூகம் மாற வேண்டும் என்பதே இந்தத் தொடர் விழிப்புணர்வின் இலக்காகும். மதுபானம் குறித்து கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின் முடிவை வரவேற்கும் அதே வேளையில், மாமன்றம் மேலும் சில கருத்துகளை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு செல்ல விழைகிறது” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்ட இராதாகிருஷ்ணன் அந்தக் கருத்துகளைக் கீழ்க்காணும் பட்டியலிட்டார்:

1. தேநீர்க் கடை, மளிகைக் கடை, சில்லைறை கடை மற்றும் பலசரக்குக் கடை போன்றவற்றில் சம்சு அல்லது மலிவுவிலை மது விற்கப்படுவதைத் தடைசெய்ய அமலாக்க நடவடிக்கைகள் கடுமையாக்கப்படவேண்டும். நகர் பகுதிகளில் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் அமலாக்க நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. 750 மில்லி லிட்டருக்கும் குறைவாக மதுபானம் விற்கப்படுவது தடைசெய்யப்பட வேண்டும்.

3. அனைத்து விதமான மதுபானங்களையும் விற்கும் நேரத்தை நிர்ணயிக்க எக்சைஸ் சட்டம் 1976இன் கீழ் உள்ள விதிமுறைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும்.

4. பொது இடங்களில் மது அருந்துவது குறித்து புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். காவல் துறையினர் இந்தச் சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

5. மதுபான விற்பனை தொடர்பிலான குற்றங்களுக்கு சுங்கத்துறை போன்று எக்சைஸ் சட்டம் 1976இன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

6. மதுப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் திட்டங்கள் தோட்டப்புறங்களிலும் புறநகர் பகுதிகளிலும் விரிவுப்படுத்த வேண்டும்.

“இந்த நாட்டில் பல குடும்பங்கள் சீர்குலைந்து போவதற்கு மது முக்கிய காரணமாக உள்ளது. எனவே, இதை அழிப்பது என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமன்று.
தனியார் தொண்டு ஊழிய நிறுவனங்களும் முன்னெடுத்துச் செயல்பட வேண்டும்.
இது, ஒவ்வொரு சமூகத்தின் கடப்பாடகும். தனிமனித சுய ஒழுக்கமும் இதற்கு தூண்டுகோலாக அமையவேண்டும். மேலும், இந்த நாட்டில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க அரசாங்கம் காட்டும் முனைப்பை, போதைப்பொருளின் மற்றொரு வடிவமான மது ஒழிப்பிலும் காட்ட வேண்டும்” எனவும் மாமன்றம் தனது அறிக்கையில் வலியுறுத்தியது.