Home One Line P1 “மது விற்பனையை முறைப்படுத்துங்கள் – தடை வேண்டாம்”

“மது விற்பனையை முறைப்படுத்துங்கள் – தடை வேண்டாம்”

1570
0
SHARE
Ad
மதுபானங்கள் – மாதிரிப் படம்

கோலாலம்பூர் : பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் மது விற்பனை தடை மீதான விவகாரத்தில் “முறையான நடைமுறைகளை அறிமுகப்படுத்துங்கள். மாறாக முற்றாக தடை விதிக்க வேண்டாம்” என முஸ்லிம் அல்லாத அனைத்து மதங்களுக்கான கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.

பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கிய மதம், தாவோயிசம் ஆகிய மதங்களை உள்ளடக்கிய தேசிய ஆலோசனை மன்றக் கூட்டமைப்பு நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் இந்த வேண்டுகோளை விடுத்தது.

அடுத்த ஆண்டு அக்டோபர் முதற்கொண்டு கோலாலம்பூரில் செயல்படும் பலசரக்கு கடைகளிலும் மருந்து கடைகளிலும் 24 மணி நேரம் செயல்படும் கடைகளிலும் மது விற்பனை முற்றாக தடை செய்யப்படும் என கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து இந்த முடிவுக்கு தொடர்ந்து பல தரப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பேட்ரியோட் எனப்படும் முன்னாள் இராணுவ வீரர்களின் அமைப்பின் தலைவர் முகமட் அர்ஷாட் ராஜி மோகன் ஹர்ஷா ராஜி அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மலேசிய ஆயுதப் படைகளின் முன்னாள் தலைவர் ஹாஷிம் முகமட் அலி இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

இதன் தொடர்பில் நேற்று அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கான மத கூட்டமைப்பு, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிரான இந்த உத்தரவு மலேசிய அரசியல் அமைப்பின் 11-வது விதிக்கு முரணானது எனக் கூறி இருக்கின்றனர்.

“மது அருந்தியபின் கார் ஓட்டுவது, 18 வயதுக்கும் குறைவானவர்களிடம் மது விற்பனையைத் தடை செய்வது, சில அகால வேளைகளில் மது விற்பனையைக் கட்டுப்படுத்துவது, நிறுத்தி வைப்பது போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறைகளை  வரவேற்கிறோம். ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாக் கடைகளிலும் மது விற்பனையை தடை செய்வது அரசியலமைப்பு சட்ட விதி 11-க்கு முரணானது ஆகும்” என முஸ்லிம் அல்லாதவர்களுக்கான மத கூட்டமைப்பின் அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

முஸ்லிம் அல்லாத சில தரப்பினர் குறிப்பாக சபா, சரவாக் பூர்வ குடிமக்கள் தங்களின் கலாச்சார, மத நிகழ்ச்சிகளின்போது மது பரிமாறுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் என்பதையும் முஸ்லிம் அல்லாதார் மத கூட்டமைப்பின் அறிக்கை சுட்டிக் காட்டியது.

கொவிட்-19 பிரச்சனையால் நாடு முழுமையிலும் வணிக மையங்களும் கடைகளும் பெரும் அளவிலான வருமான இழப்பை சந்தித்து இருக்கின்றன. இந்த வேளையில் முற்றாக மதுபான விற்பனை தடை என்பது அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

இந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கான மத கூட்டமைப்பின் தலைவர் ஜூலியான் லியோவ் பெங் கிம் (கிறிஸ்துவக் கூட்டமைப்பு), சர்தார் ஜாகிர் சிங் (மலேசிய குருத்துவாரா ஆலயங்களின் கூட்டமைப்பு), டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷண் (மலேசிய இந்து சங்கம்) டான் ஹோ சியோவ் (தாவோயிசம் சங்கங்களின் கூட்டமைப்பு) சிங் கான் (மலேசிய புத்த மத சங்கம்) ஆகியோர் அந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.