Home நாடு “மலேசிய இந்து சங்கத்தில் பிரிவினை- இந்துக்களுக்கு பேரிழப்பாகும்” – இராமசாமி கூறுகிறார்

“மலேசிய இந்து சங்கத்தில் பிரிவினை- இந்துக்களுக்கு பேரிழப்பாகும்” – இராமசாமி கூறுகிறார்

671
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : “மலேசிய இந்து சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் பிரிவினை, இந்துக்களுக்கு பேரிழப்பாகும்” பினாங்கு மாநிலத்தின் 2-வது துணை முதல்வர் டாக்டர் பி.இராமசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்:

“கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் தோல்வியடைந்த மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் மோகன் ஷானும் அவரது குழுவினரும் ஜனநாயக ரீதியில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது வெட்கக்கேடானது. கேவலமானது.

#TamilSchoolmychoice

அவரும் அவரது அணியினரும் மாற்று அணிக்கு ஆதரவாக வாக்களித்த தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இருப்பினும், அத்தகைய அறிவிப்பு மலேசிய இந்து சங்கத்திலிருந்து உண்மையாக வெளியேறுவதை விட உறுப்பினர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது. தேர்தல் சட்ட விதிமீறல்களைக் காரணம் காட்டி ஓரிரு நாட்களில், தன்னை மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்க மத்தியக் குழுக் கூட்டத்தை விரைவாகக் கூட்டினார்.

சட்டப்பூர்வ முறைகேடுகள் இருந்திருந்தால், மலேசிய இந்து சங்கம் ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தின் முடிவுக்கு வழிவிடுவது அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பதிவதிகாரியிடம் புகாரளிப்பது சரியான பாதையாக இருந்திருக்கும். ஆனால் மலேசிய இந்து சங்க கட்டடத்தை பூட்டி வைப்பதும், மத்திய செயற்குகுழு கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதும், அவரும் அவரது அணியும் தகாத முறையில் வாக்களிக்கப்பட்ட சமீபத்திய தேர்தல்களை இரத்து செய்வதற்கான வழி சரியானதல்ல.

தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மலேசிய இந்து சங்கம் ஒரு எளிய ஜனநாயக முறையைக் கடைப்பிடிக்க முடியா விட்டால், நாட்டில் உள்ள இந்துக்களின் சார்பாக சமய அமைப்பாக எவ்வாறு பேச முடியும். நாட்டில் உள்ள இந்துக்களுக்கான “தாய்” அமைப்பாக மலேசிய இந்து சங்கம் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்கிறது.

அடிப்படையில், இது நன்கொடைகளுக்காக அரசையும் மக்களின் நல்லாதரவையும் நம்பியிருக்கும் அரசு சாரா நிறுவனமாகும். இந்த அமைப்பில் அனைத்து இந்து கோவில்களும் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதாக இது பெருமைபட்டுக் கொள்கிறார்கள் , இது ஒரு பயனுள்ள பிரதிநிதித்துவம் அல்ல, ஆனால் அது வெறும் ஒருங்கிணைப்பு மட்டுமே.

சில ரொட்டித் துண்டுகளுக்காக ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயல்படுவதே சில தலைவர்களின் செயல்பாடாக உள்ளது. மோகன் ஷானின் கீழ் உள்ள மலேசிய இந்து சங்கம் இந்துக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை எதிர்கொள்ளத் தவறிவிட்டது.
சிறார்களின் மதமாற்றம், கோயில் உடைப்பு மற்றும் இந்துக்களுக்கு எதிரான பிற பாரபட்சமான நடைமுறைகள் மூடி மறைக்கப் பட்டுள்ளது.

மலேசிய இந்து சங்கத்தின் உறுப்பினர்கள் தலைமை மாற்றத்தை அவசரமாக விரும்பியதற்கு இதுவே காரணம்.
அத்தகைய மாற்றம் இல்லாமல், மலேசிய இந்து சங்கம் மோசமான புதைகுழியில் மூழ்கிவிடும்.

நாடு முழுவதிலும் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்கள் மோகன் ஷான் தலைமைக்கு எதிராக வாக்களித்தனர்.

சுருக்கமாகச் சொன்னால், நாட்டில் இந்துக்களுக்கு ஒரு புதிய தலைமைதுவத்தையும் புதிய தொடக்கத்தையும் அவர்கள் விரும்புகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக, ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலைத் தொடர்ந்து மோகன் ஷான் மற்றும் அவரது ஆதரவாளர்களால் இந்த மக்கள் ஆணை பறிக்கப்பட்டுள்ளது.

மலேசிய இந்து சங்கத்தில் உள்ள உட்பூசல்கள் நாட்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகள் எனத் தொடரலாம். உண்மையில் தோல்வியடைந்தவர்கள் சர்ச்சையில் உள்ள பிரிவினைவாதிகளாக இருக்க மாட்டார்கள், ஆனால் நாட்டில் மறக்கப்பட்ட இந்துக்களாக கருதப்படுவார்கள்.

மலேசியாவில் இந்துக்கள் எண்ணிக்கையில் சிறிய சமூகம், ஆனால் அவர்கள் தங்கள் குறுகிய அகங்காரம், பணம் மற்றும் அதிகார ஆசைகளோடு அதிக ஆர்வமுள்ள தலைவர்களால் பெரிய அளவில் பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஜனநாயகத் தீர்ப்பை ஏற்க மோகன் ஷான் தலைமையிலான கோஷ்டி தயாராக இல்லாத நிலையில் தேர்தல் நடத்துவதில் என்ன பயன்?

நாட்டில் இந்துக்கள் இழிவாகவும் கேவலமாகவும் பார்க்கப்பட்டால், அதன் பழியை மலேசிய இந்து சங்கத் தலைவர்களே அதிகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.