கோலாலம்பூர் – “அண்மையில் இலங்கையில் நடந்த கோர பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலின் தாக்கத்திலிருந்து உலக மக்கள் மீள முயன்று கொண்டிருக்கும் வேளையில், கோலாலம்பூரில் உள்ள மூன்று முக்கியக் கோவில்களில் பாதுகாப்பு மிரட்டல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ள இந்து தர்ம மாமன்றம்,
“சீபில்டு ஆலயத்தில் நடந்த கலவரத்தின்போது காயமடைந்து பின்னர் மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கத்தில் கும்பல் ஒன்று நாட்டில் உள்ள வழிப்பாட்டுத் தலங்களைத் தகர்க்க திட்டமிடப்பட்டிருந்த சதிச்செயலை காவல் துறை படையினர் முறியடித்ததற்கு” அரச மலேசிய போலீஸ் படைக்கு தனது பாராட்டையும் நன்றி கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
“நான்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதன் காரணமாக கோலாலம்பூரில் உள்ள பத்துமலை திருத்தலம், கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில் மற்றும் எச்.எஸ். லீ சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலையங்களில் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக பத்துமலை கோயில் நிருவாகம் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பெரும் ஆலயங்களும் நாட்டின் மற்ற நகரங்களிலுள்ள பெரும் ஆலயங்களும் தக்க பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும்” என்றும் மாமன்றத்தின் சார்பில் அதன் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை (படம்) கேட்டுக் கொண்டார்.
மலேசியர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் செயலாற்றி வரும் காவல் துறை தனது அதிரடி நடவடிக்கையின் வழி நால்வரைக் கைது செய்துள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்டுள்ள மேலும் மூன்று பேரைத் தேடி வருவதும் போற்றுதற்குரியதே என்றும் மாமன்றத்தின் அறிக்கை கூறியது.
நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்ய காவல் துறையினர் போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நாம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது. நடந்த இச்சம்பவத்தை முதன்மைப்படுத்தி விசாரணையை முடுக்கிவிட்டு விரைவில் நல்லதொரு தீர்வு காண காவல்துறையை மாமன்றம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டது.
நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையாக வாழ்வதே பல்லின மக்கள் வாழும் நமது மலேசிய திருநாட்டின் உன்னத சிறப்பாகும். அதற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மலேசிய வாழ் அனைத்து இந்துக்களும் அமைதிக்காத்து நம் நாட்டில் விரும்பத் தகாத அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் இருக்க ஆலயங்களில் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்படுத்த உறுதுணையாக இருப்பதோடு ஆலயங்களில் பொதுப் பிரார்த்தனைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வேளையில் இந்துக்களாகிய நாமும் நம் ஆலயங்களையும் ஆலய சொத்துக்களையும் முறையாக பாதுகாத்திட உரிய பாதுகாப்பு திட்டங்களையும் நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுதல் மிக மிக அவசியம். ஆலயங்களுக்கு ஆதரவு அளித்து பாதுகாப்பை மேம்படுத்திட ஒத்துழைக்கவும் மாமன்றம் தயாரகவும் உள்ளது.
ஆலயங்கள் குறிப்பாக, திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிகமான பக்தர்கள் கூடும் வேளையில், ஆலயங்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். ஆலய வளாகத்தில் வீனான அத்துமீறலை தவிர்ப்பதற்கு இது ஏதுவாக அமையும். மலேசிய வாழ் இந்துக்கள் யாவரும் ஒன்றிணைந்து இவற்றை செயல்படுவோமேயானால் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சவால்களை எதிர்க்கொள்ள இயலும் என்றும் மலேசிய இந்துதர்ம மாமன்ற தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை தனது அறிக்கையில் தெரிவித்தார்.