கோலாலம்பூர் – மலேசியாவின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், இனி விமான நிலையத்திற்குள் பயணிகள் மட்டுமே செல்லும் வகையில் விதிமுறைகளை அமல்படுத்தலாம் என அரசாங்கம் யோசித்து வருகின்றது.
இது குறித்து துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் பயணம் செய்பவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குள் செல்லும்படியும், வழியனுப்ப வருபவர்கள் கட்டிடத்திற்கு வெளியே அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்கும் வகையிலோ திட்டமிட்டு வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
“மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டுடன் இணைந்து இந்தப் பரிந்துரை குறித்து கலந்தாலோசிக்கும் படி போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாயிடம் கூறியுள்ளோம். விரைவில் இந்தப் பரிந்துரை அமல்படுத்தப்படும்” என்று சாஹிட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
11-வது ஆசியா-ஐரோப்பா மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சாஹிட் மங்கோலியாவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.