மிலான் – சரக்குகள் மற்றும் விரைவு அஞ்சல் நிறுவனமான டிச்எல் (DHL) நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இத்தாலி நாட்டின் மிலான் நகரின் சாலையின் நடுவில் தரையிறங்கி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மிலான் நகரின் வடகிழக்கு பகுதியிலுள்ள விமான நிலையத்தில் ஓடுதள பாதையிலிருந்து விலகி அந்த விமானம் அருகிலிருந்த சாலையில் தரையிறங்கியது.
ஆனால், நல்ல வேளையாக அந்த விமானத்தில் இருந்த இரு பணியாளர்களுக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. சாலையிலும் யாருக்கும் அடிபடவில்லை.
டிஎச்எல் 737-400 ரகத்திலான அந்த விமானம், பாரிஸ் நகரின் சார்ல்ஸ் டிகால் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பெர்காமோ என்ற பகுதியிலுள்ள ஒரியோ அல் செரியோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால், விமான ஓடுதளப் பாதையை மீறி, விமான நிலையத்தின் வேலிகளைக் கிழித்துக் கொண்டு, சாலையில் பாய்ந்தது.
சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமை உள்நாட்டு நேரம் காலை 4.00 மணியளவில் அந்தப் பகுதியின் வானிலை மோசமாக இருந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை காலை உள்நாட்டு நேரப்படி 7.00 மணிக்கு அந்த விமான நிலையம் மீண்டும் சேவைகளுக்குத் திறக்கப்பட்டது.