புதுடெல்லி – அமெரிக்க சிறையில் இருக்கும் தொழிலதிபர் தகவூர் ராணாவை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை செய்ய இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சு அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் தகவூர் ராணா, பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு பல்வேறு உதவி செய்து வந்தவன்.
இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதற்கும் அவன் உதவிகள் செய்துள்ளான். குறிப்பாக மும்பை தாக்குதலுக்கு அவன் பெரிய அளவில் உதவிகள் செய்துள்ளான்.
இந்நிலையில், அமெரிக்க காவல்துறையிடம் சிக்கிய ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு முதல் ராணா சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறான்.
ராணாவை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்தால், தீவிரவாதிகள் பற்றியத் தகவல்கள் கிடைக்கலாம் என்பதால், அவனை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக அதிகாரிகள் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர்.
எனினும் அமெரிக்க அரசு, ராணாவை அனுப்ப சம்மதிக்குமா? என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.