மும்பை – மும்பையிலுள்ள புகழ் பெற்ற ஹாஜி அலி தர்காவுக்குள், தொழுகை நடத்தப்படும் மையப் பகுதியில் பெண்கள் நுழையக் கூடாது என்ற தடை இதுவரை வழக்கில் இருந்து வந்தது.
ஆனால் அதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இத்தகைய தடை இந்திய அரசியல் சாசன அமைப்புக்கு எதிரானது எனக் கூறியுள்ள மும்பை நீதிமன்றம், இனி பெண்களும் இந்த தர்காவுக்குள் நுழையலாம், தொழுகை நடத்தலாம் என இன்று வெள்ளிக்கிழமை காலை அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான போதுமான பாதுகாப்பை மாநில அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தொடரப் போவதாகவும் அதுவரை இந்தத் தீர்ப்பு அமுலாக்கப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், ஹாஜி அலி தர்காவை நடத்திவரும் அறவாரியம் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தனது தீர்ப்பு அமுலாக்கப்படுவதை ஆறு வாரங்களுக்கு மும்பை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சபரிமலையிலும் பெண்கள் வழிபாடு நடத்த இனி அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சபரிமலையிலும் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்ற பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.