கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை பிற்பகலில் கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ‘மலேசியாவின் முதல்நிலை அதிகாரி’-யைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
‘தங்காப் MO1’ (மலேசியாவின் முதலாவது அதிகாரியைப் பிடியுங்கள்) என்ற சுலோகத்துடன் இன்றைய ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படுகின்றது. அமெரிக்க அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கில் மலேசியாவின் முதல் நிலை அதிகாரி 1எம்டிபி விவகாரங்களில் தவறுகள் செய்தார் என சுட்டிக் காட்டியிருந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த முதல்நிலை அதிகாரி யார் என்ற விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.
இதற்கிடையில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கலந்து கொள்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் சேரவில்லை என்பதால், மகாதீர் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.