டாக்கா – கடந்த ஜூலை 1-ஆம் தேதி, வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஓர் உணவகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 வெளிநாட்டவர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவன் இன்று வங்காள தேச பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
இந்தத் தாக்குதலில் பங்கு பெற்றவர்களின் ஒருவன், தான் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் போதனைகளைப் பின்பற்றுகிறேன் எனக் கூறியதைத் தொடர்ந்து, ஜாகிர் நாயக் மீதான விசாரணைகளும் முடுக்கி விடப்பட்டன. அவரது பிரச்சார இயக்கமும், தொலைக்காட்சி அலைவரிசை மூலமான பிரச்சாரங்களும் தடை செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று வங்காள தேச பாதுகாப்புப் படைகள் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவன் மேற்கூறப்பட்ட டாக்கா உணவகத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட தமிம் அகமட் சௌத்திரி என அடையாளம் காணப்பட்டுள்ளான்.
டாக்காவின் வெளிப்புறப் பகுதியில் உள்ள நாராயங்கணி என்ற பகுதியில் இந்தப் பயங்கரவாதிகள் ஒளிந்து கொண்டிருந்தபோது, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் இன்று தாக்குதல் நடத்தினர்.