Home நாடு வங்காளதேச இடைக்காலத் தலைவர் முகமட் யூனுஸ் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவார்கள் என அன்வாருக்கு உறுதியளித்தார்

வங்காளதேச இடைக்காலத் தலைவர் முகமட் யூனுஸ் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவார்கள் என அன்வாருக்கு உறுதியளித்தார்

224
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : வங்காளதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், சிறுபான்மையினர் உட்பட அனைத்து வங்காளதேச மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு உறுதியளித்துள்ளார்.

முகமது யூனுசை ‘நீண்ட கால நண்பர்’ என்று விவரித்த அன்வார், வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதற்காக யூனுஸுக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசியில் அவரை அழைத்ததாகக் கூறினார்.

“யூனுஸுக்கு மலேசியாவுடன் நீண்டகால நல்லுறவு உள்ளது. எனவே, வங்காளதேசத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் மீண்டும் கட்டியெழுப்புவதில் இடைக்கால அரசாங்கத்திற்கு உதவவும் ஆதரவளிக்கவும் மலேசியா தயாராக உள்ளது என்று நான் அவருக்கு உறுதியளித்தேன். சிறுபான்மையினர் உட்பட அனைத்து வங்காளதேச மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதாக யூனுஸ் உறுதியளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது,” என பிரதமர் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 14) தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதர உறவை மேலும் வலுப்படுத்த விரைவில் வங்காளதேசத்திற்கு குறுகிய பயணம் மேற்கொள்ளுமாறு யூனுஸ் தன்னை அழைத்ததாகவும் அன்வார் தெரிவித்தார்.

இந்துக்கள் மீதான தாக்குதல்கள்

வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அந்த சம்பவங்களுக்கு எதிரான குரல்கள் மலேசியாவிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ, வங்காளதேச இந்துக்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் தனது குரலை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“இஸ்லாமிய உலகில் பிரதமருக்கு முன்னணி பங்கு இருப்பதால், வங்காளதேசத்தில் உள்ள முஸ்லிம் தலைவர்களை அணுகி, தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருமாறும் அவர் அழைப்பு விடுக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அன்வரின் மௌனம் குறித்து மலேசியாவில் உள்ள பல இந்து குழுக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் சார்லஸ் சுட்டிக்காட்டினார்.

இதேபோல், உரிமை கட்சியின் தலைவரான பேராசிரியர் பி. ராமசாமியும் இந்த விவகாரத்தில் பிரதமரின் மௌனம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இன்று புதன்கிழமை விடுத்த அறிக்கையில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜசெகவைச் சேர்ந்தவருமான வீ.கணபதி ராவ் தனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டார். பிரதமர் அன்வார் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர வங்காள தேச அரசாங்கத்திற்கு நெருக்குதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.