Home நாடு வங்காளதேச இந்துக்கள் மீதான வன்முறை – மலேசியா நெருக்குதல் தர வேண்டும்!

வங்காளதேச இந்துக்கள் மீதான வன்முறை – மலேசியா நெருக்குதல் தர வேண்டும்!

167
0
SHARE
Ad

கிள்ளான் :  அண்மைய சில வாரங்களாக வங்காளதேச நாட்டில் நடந்து வரும் அரசியல் சம்பவங்கள் அனைத்துலக அளவில் மற்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.  அந்த நாட்டில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ் இன்று (புதன்கிழமை ஆகஸ்ட் 14) விடுத்த அறிக்கையில் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

சிறுபான்மை இனத்தவரான இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வங்காள தேசத்தில் உள்ள சிறுபான்மை இனத்தவர் மீது குறிப்பாக இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள், இல்லங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும், அவர்களை இனரீதியாக ஒடுக்கும்-அழிக்கும் செயல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கணபதிராவ் அறைகூவல் விடுத்தார்.

“இவை தனி மனிதர்கள் மீது அல்லது தனி சமூகங்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மட்டுமல்ல. மாறாக, இவை போன்ற மோசமான செயல்கள் நமது மனித குல அமைப்பின் கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் என்பதோடு அனைத்துலக சமுதாயம் எதற்காக பாடுபடுகிறதோ அந்த கொள்கைகளுக்கு எதிரான செயல்களும் ஆகும். எந்த ஒரு நாகரிக நாட்டிலும் இதுபோன்ற செயல்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. எனவே இந்த விவகாரத்தை நோக்கி அனைத்துலக சமூகத்தின் கவனமும் கண்டனமும் திரும்ப வேண்டும்” என்றும் அவர் தனதறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“வங்காளதேசத்தில் உள்ள இந்து சமூகம் அந்த நாட்டின் கலாச்சார சமூக அமைப்பின் இரண்டறக் கலந்த, இணை பிரியாத ஓர் அங்கமாகும். சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தாலும் இந்துக்கள் அந்த நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அளப்பரிய பங்கை வழங்கி இருக்கின்றனர். எனினும் அண்மையக் காலமாக அவர்களுக்கு எதிராக விதைக்கப்படும்,  கட்டவிழ்த்து விடப்படும் அரசியல் வெறுப்பு குற்றங்கள் அந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நிலைகுலைந்து இருப்பதற்கான உதாரணங்களாகும். இது போன்ற கொடூரங்கள், அவலங்கள், மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல – மாறாக சட்டத்தை மதிக்காத – சட்டத்தைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் ஆகும். எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும் பல இன மக்களை அங்கீகரிக்கும் பரஸ்பர மரியாதையும் மதிப்பும் பேணப்பட வேண்டும்” என்றும் கணபதிராவ் வலியுறுத்தினார்.

வீ.கணபதி ராவ்

மலேசியாவில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்து இனத்தவரின் பாதுகாப்பு, நலன்கள் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட கணபதி ராவ், வங்காளதேச அரசாங்கம் சிறுபான்மை இனத்தவரை பாதுகாக்க உடனடியாகவும் தகுந்த பலன் தரக்கூடிய வகையிலும் நடவடிக்கைகளை  முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

“சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டவர்கள் மீது நீதி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தொடர்ந்து கொண்டிருக்கும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு வங்காளதேச குடிமகனும் அவன் எந்த மத, இன பின்னணியைக் கொண்டிருந்தாலும் அந்த நாட்டில் அச்சமின்றி வாழ முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கு வங்காளதேச அதிகார மையம் பொறுப்பேற்க வேண்டும். அதே வேளையில் அனைத்துலக சமூகமும் குறிப்பாக அண்டை நாடுகளும், அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு வங்காள தேசத்தின் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட முன்வர வேண்டும்.  இல்லாவிட்டால் இதை அப்படியே விட்டுவிட்டு அமைதி காத்தால், இந்த நீதிக்கு புறம்பான நடவடிக்கைகளில் வங்காளதேச அதிகார மையத்துக்கும் பங்குண்டு என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படும். இதுபோன்ற வன்முறை கலாச்சாரங்கள் மீது கண்டனம் தெரிவிப்பதிலும் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பையும்  அந்த வட்டாரத்தில் விதைப்பதிலும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்” என கணபதி ராவ் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.

“நமது மலேசிய அரசாங்கம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அரச தந்திர அணுகுமுறைகளின் மூலம் வங்காளதேச அதிகார மையங்களுடன் தொடர்பு கொண்டு அனைத்து வங்காளதேச குடிமக்களும் – அவர்களின்  இன, மத பின்னணி எதுவாக இருந்தாலும் – அவர்கள் பாதுகாக்கப்பட அந்நாட்டை வலியுறுத்த வேண்டும். இந்த வட்டாரத்தில் மிகவும் செல்வாக்குடைய நாடாக திகழும் மலேசியா, வங்காளதேச விவகாரத்தில் அமைதிப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுவதற்கும், அங்கு மாற்றங்கள் கொண்டுவரப்படுவதற்கும் முக்கிய காரணகர்த்தாவாக திகழ முடியும். மலேசியா மற்ற ஆசிய நாடுகளுடனும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதிலும் – வன்முறை சம்பவங்களைக் கட்டவிழ்த்து விட்டவர்களை நீதிக்கு முன் நிறுத்துவதற்கும் – வங்காளதேச அரசாங்கத்தின் மீது நெருக்குதலை நாம் தர வேண்டும். மேலும் இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மன்றத்திலும் இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் முன்பாகவும் மலேசியா முன் வைக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு செய்வதன் மூலம் வங்காளதேச நெருக்கடிக்கு அனைத்துலக அளவிலான ஆதரவையும் கவனத்தையும் திசை திருப்ப முடியும். இதன் மூலம் வங்காளதேச சிறுபான்மை இனத்தவர்கள் எதிர்நோக்கும் அவலங்கள், கண்டும் காணாமல் மறைக்கப்படுவதை மலேசியா உறுதி செய்ய முடியும். அவர்களை பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் நாம் உறுதி செய்ய முடியும்.  பாதிக்கப்பட்டவர்கள் மீதான அக்கறையை  வெறும் வார்த்தைகளால் ஆறுதல் கூறிக் காட்டுவதைவிட, பிரச்சனைகளை எதிர்நோக்கி அவதிப்பட்டு கொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை – ஒரு சாதகமான மாற்றத்தை நமது நடவடிக்கைகள் மூலம் நாம் கொண்டு வர முடியும்” என்றும் கணபதி ராவ் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

“கொடூரமான, வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுவதில் நான் அவர்களோடு இணைந்து உறுதியோடு நிற்கின்றேன். சிறுபான்மை இனத்தவர்கள் மீதான பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் சாதாரண விவகாரம் மட்டுமல்ல! மாறாக  எல்லைகள் கடந்த ஓர் அனைத்துலக நடவடிக்கையாகும். இந்த சிறுபான்மை இனத்தவருக்கான வன்முறை கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்படுவதோடு,  ஒவ்வொரு மனிதனும் அவனது மதப் பின்னணி என்னவாக இருந்தாலும் அவன் அமைதியுடனும் மரியாதையுடனும் தன் நாட்டில் வாழ்வதை உறுதி செய்வதில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். வங்காளதேச அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு உறுதியான -இறுதியான முடிவுகளை எடுத்து வங்காளதேச நாட்டில் சட்டம் நிலைநிறுத்தப்படுவதற்கும், மதிக்கப்படுவதற்கும் அங்குள்ள குடிமக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்றும் கணபதி ராவ் தெரிவித்தார்.