டாக்கா : வாழ்க்கை ஒரு மனிதனை எங்கெல்லாம் கொண்டு செல்லும் என்பதற்கு அண்மைய உதாரணம், வங்காள தேசத்தின் முகமது யூனுஸ். ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக பல பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்தவர். பொருளாதார நிபுணரான இவர் கூட்டுறவு பாணியில் ஏழை மக்களுக்கு சிறுகடன் வழங்கும் கூட்டுறவு பாணி அமைப்பை வங்காளதேசத்தில் நிறுவி நடத்தினார். அதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் நோபல் பரிசு பெற்றார். அதன் மூலம் உலக அளவில் பிரபலமானார்.
இப்போது வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசினா திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து, முகமது யூனுஸ் வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்துவார் என அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த முடிவானது இராணுவ ஆட்சி அமைந்தாலும், ஒரு சிறந்த பொருளாதார நிபுணரை அரசாங்கத் தலைவராக நியமித்ததற்காக இராணுவத்தினருக்கு பாராட்டுகளை ஈட்டித் தந்துள்ளது.
வங்காளதேசத்தின் ஒரே நோபல் பரிசு பெற்றவரான முகமது யூனுஸ் நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள தேச அதிபர் முகமது ஷஹாபுதீனின் ஊடகச் செயலாளர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிபர் முகமது ஷஹாபுதீன், நாட்டின் ஆயுதப்படைகளின் தலைவர்கள், வாரக்கணக்கில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய மாணவர் இயக்கத்தின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி அண்டை நாடான இந்தியாவிற்கு தப்பிச் சென்றார். அவரது பதவி விலகலைத் தொடர்ந்து அமைச்சரவை கலைக்கப்பட்டது.
அவரது பதவி விலகலைத் தொடர்ந்து, வங்காளதேச ராணுவத் தளபதி வாகர்-உஸ்-ஜமான் நாட்டு மக்களிடையே உரையாற்றி, நாட்டை நிர்வகிக்க இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) ஷஹாபுதீன் நாட்டின் நாடாளுமன்றத்தையும் கலைத்தார்.