மார்ச் 20 – இன்று புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் மலேசிய நாடாளுமன்றம் பிரதமர் நஜிப் துன் ரசாக்கால் கலைக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் அரசியல் வட்டாரங்களில் வலுக்கத் தொடங்கியுள்ளன.
நாளையோடு நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தின் ஐந்தாண்டு கால தவணை முடிவுக்கு வருவதால் அதற்கு முன்பாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட பிரதமர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
மாநில சட்டமன்றங்கள் தவணைக் காலம் முடிந்து இயல்பாகவே கலைவது என்பது மலேசிய சரித்திரத்தில் இதுவரை நிகழாத ஒன்று என்பதால் அதனால் சட்டப் பிரச்சனைகள் எழலாம்.
இதன் காரணமாகவும் முதல் சட்டமன்றம் இயல்பாகவே கலைவதற்கு முன்னால் நாடாளுமன்றத்தையும் தாங்கள் ஆட்சி செய்யும் மாநில சட்டமன்றங்களையும் கலைக்க தேசிய முன்னணி அரசு முடிவு செய்துள்ளது.
இதற்குரிய பேரரசரின் சம்மதத்தை பிரதமர் நேற்றே பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
எல்லா உறுப்பியக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வேட்பாளர் பட்டியலுக்கு தேசிய முன்னணி தலைமைத்துவம் இறுதி வடிவம் கொடுத்து விட்டதாகவும் அடுத்த சில நாட்களில் மேலும் சில இறுதிக் கட்ட சிக்கல்கள் தீர்த்து வைக்கப்படும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
நேற்று நாட்டின் பொருளாதார உருமாற்றத் திட்டங்கள் வெற்றியடையத் தொடங்கியுள்ளன என்று தொலைக்காட்சி வழி பிரதமர் அறிவித்துள்ளதும் பொதுத் தேர்தல் அறிவிப்புக்கான ஒரு முன்னோடித் திட்டமாக கருதப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு விளக்கமளித்த பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அறிவிப்பை பிரதமர் செய்வார் என நம்பப்படுகின்றது.