கோலாலம்பூர் – நாட்டின் தலைசிறந்த மூத்த எழுத்தாளரும் விமர்சகருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்களின் மறைவு செய்தி மனத்திற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது என்றும், அன்னாரின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இன்று விடுத்த அறிக்கையொன்றில் கூறினார்.
“மலேசிய நாட்டின் எழுத்துத் துறையின் பரிணாம வளர்ச்சிக்கு முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. தமிழ் படைப்புகளை இணையத்திற்குள் புகுத்தி சாதனை படைத்த பெருமை இவருக்குண்டு. மேலும், தமிழ் எழுத்துலக வலைத்தளம் உருவாகப் பெரும் பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலேசிய நாட்டில் பல இலக்கிய ஆர்வலர்கள் சிறுகதை எழுதுவதற்கு முனைவர் அவர்களின் பங்களிப்பும் விமர்சனங்களும் பெரும் உறுதுணையாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. சிறுகதை கருத்தரங்குகள், திறனாய்வுக் கட்டுரைகள், வானொலி நாடகம் எழுதுவது எப்படி போன்ற பட்டறைகளை நடத்தி அதன்வழி பல அரிய கலைஞர்களை இந்நாட்டிற்கு அறிமுகம் செய்த பெருமையும் இவரையே சாரும்” எனவும் சுப்ரா மேலும் தெரிவித்துள்ளார்.
டாக்டர் சுப்ரா தற்போது, மணிலாவில் நடைபெற்று வரும் அனைத்துலக சுகாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார்.
“எழுத்துலகத்தைத் தாண்டி மிகச் சிறந்த பேராசிரியருமான ஒருவரை இழந்து இன்று எழுத்துலகம் துயரத்திலும், துக்கத்திலும் ஆழ்ந்து நிற்கின்றது. இவ்வேளையில், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதோடு அன்னாரை இழந்து துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் சுப்ரா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.